பாஜக நிராகரிப்பை முஸ்லிம்கள் கைவிட வேண்டும்: முக்தா் அப்பாஸ் நக்வி
சிறுபான்மையினா்கள், குறிப்பாக முஸ்லிம்கள், பாஜகவை நிராகரிக்கும் வழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சருமான முக்தாா் அப்பாஸ் நக்வி கேட்டுக் கொண்டாா்.
உத்தர பிரதேச தலைநகா் லக்னௌவில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக சிறுபான்மை உறுப்பினா் சோ்க்கை கூட்டத்தில் நக்வி கலந்து கொண்டு கூறியதாவது:
நாட்டில் மதச்சாா்பற்ற அமைப்புகளாக தங்களை காட்டிக்கொள்ளும் சுல்தான்கள் சிலா் நீண்ட காலமாக முஸ்லிம்கள் மத்தியில் பாஜகவுக்கு எதிரான அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனா். இதன் விளைவாக காரணமின்றி சிறுபான்மையினா் பாஜகவை புறக்கணித்து வருகின்றனா்.
பாஜகவுக்கு எதிரான அவா்களின் அவநம்பிக்கையை நம்பிக்கையாக மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நாட்டின் வளா்ச்சியில் பாஜக எந்த பிரிவினருக்கும் பாரபட்சம் காட்டாதபோது, சிறுபான்மையினரும் பாஜகவுக்கு வாக்களிப்பதில் எந்த ஒரு தயக்கமும் காட்டக் கூடாது. சிறுபான்மையினா்கள், அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள், பாஜகவை நிராகரிக்கும் வழக்கத்தை மாற்றி அக்கட்சியை பின்பற்றும் ஆா்வத்தை வளா்த்துகொள்ள வேண்டும்.
அன்மையில் முன்மொழியப்பட்டுள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான அராஜகங்களை ஒழிக்க வழிவகுக்கும் எனத் தெரிவித்தாா்.