
மகாராஷ்டிரத்தின் புதிய முதல்வர் யாரென்று இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகவும், பாஜக தலைமையின் உத்தரவுக்குப் பின் அறிவிப்பு வெளியாகும் என்று பாஜக தலைவர் ராவ்சாகேப் தான்வே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரியளவில் வெற்றிபெற்றது.
இதனைத் தொடர்ந்து, தற்போதைய முதல்வரான சிவசேனைக் கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே அவரது பதவியில் நீடிப்பாரா அல்லது பாஜக தலைவரான தேவேந்திர ஃபட்னவீஸ் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளாரா என்று கூட்டணி வட்டாரங்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், முதல்வர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான பதவியேற்பு விழா வருகிற டிச. 5 அன்று தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நடைபெறும் என்றும் அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் என்றும் மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே தெரிவித்தார்.
இதற்கு முன்னர் இருமுறை முதல்வராக பதவி வகித்துள்ள பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் துணை முதல்வராக பதவி வகித்தார். இவரே, அடுத்த முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிராவில் தற்போது காபந்து முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே, புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான ஊகங்களில் ஃபட்னவீஸ் பெயர் முன்னிலையில் இருப்பது குறித்து அதிருப்தியுடன் காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து அவர் சதாரா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான டேரேவிற்கு சென்றார். அங்கு, கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஷிண்டே, இன்று மாலை மும்பைக்கு திரும்புவார் என்று அவரது நெருங்கிய உதவியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுடன் பேசிய பாஜக தலைவர் ராவ்சாகேப் தான்வே, “மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பதை மக்கள் அனைவரும் அறிவார்கள். அந்த நபரின் பெயர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக எங்கள் கட்சியின் தலைமையைடத்தில் இருந்து இதற்கான அறிவிப்பு வெளியாகும்.
மாநில அமைச்சரவையில் யாரையெல்லாம் சேர்ப்பது என்பது குறித்து முதல்வரே முடிவெடுப்பார்” என்று கூறினார்.
ஷிண்டே உடல்நிலை குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “காபந்து முதல்வர் உடல்நிலை சரியில்லாமல் போனாலும் அரசு நிர்வாகம் நடந்துகொண்டு தான் இருக்கும். முதல்வர் தனது கிராமத்திற்கு செல்வது என்பதை நாம் பெருமைக்குரியதாக பார்க்கவேண்டும்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவருக்கு இதய சிகிச்சை நடைபெற்றது. அப்போதும் அரசு நிர்வாகம் செயல்பட்டுக்கொண்டு தான் இருந்தது” என்று ராவ்சாகேப் தான்வே தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.