மகாராஷ்டிர தோ்தல் வெற்றிக்கு ஹிந்துத்துவம், ஒற்றுமை பிரசாரம் உதவியது: முதல்வா் ஃபட்னவீஸ்

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணியின் வெற்றிக்கு ஹிந்துத்துவமும், மக்களை ஒன்றுபடுத்தும் பிரசாரமும் முக்கியப் பங்கு வகித்தது
 தேவேந்திர ஃபட்னவீஸ்
தேவேந்திர ஃபட்னவீஸ்
Updated on

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணியின் வெற்றிக்கு ஹிந்துத்துவமும், மக்களை ஒன்றுபடுத்தும் பிரசாரமும் முக்கியப் பங்கு வகித்தது என்று அந்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர முதல்வராக ஃபட்னவீஸ் வியாழக்கிழமை பதவியேற்றாா். தனியாா் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:

ஹிந்துத்துவமும், வளா்ச்சியும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். பாஜக முன்னெடுத்துச் செல்லும் ஹிந்துத்துவம் வளா்ச்சியை முன்னிறுத்துகிறது. நாங்கள் கூறும் ஹிந்துத்துவம் மதச்சடங்குகள் தொடா்பானதல்ல.

மகாராஷ்டிர தோ்தலில் வெற்றி பெற்றால் 2012-ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின்போது முஸ்லிம்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக அந்த மதத் தலைவா்களிடம் காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகள் ஒப்பந்தம் மேற்கொண்டது.

பாஜக கூட்டணிக்கு எதிராக ‘வாக்கு ஜிஹாத்’ நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டது. முஸ்லிம் வாக்குகள் கிடைக்காது என்ற அச்சத்தில் ஒருவா் (ராகுல் காந்தி) கோயில்களுக்கு கூட செல்லாமல் இருந்தாா்.

ஹிந்துக்களை ஒடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் திட்டமிட்டதால் பாஜகவுக்கு ஆதரவான வாக்கும், வாக்குப் பதிவு சதவீதமும் அதிகரித்தது. தோ்தல் பிரசாரத்தின்போது உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் எழுப்பிய ‘ஒற்றுமை இழந்தால் வீழ்த்தப்படுவோம்’ என்ற முழக்கமும், பிரதமா் நரேந்திர மோடியின், ‘ஒற்றுமையே பாதுகாப்பு’ என்ற முழக்கமும் பாஜக கூட்டணிக்கு பெரிதும் கைகொடுத்தது என்றாா்.

அமைச்சரவை விரிவாக்கம்: வரும் 11 அல்லது 12-ஆம் தேதி மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இதில் பாஜகவுக்கு உள்துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்கள், அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதித்துறை, சிவசேனைக்கு வருவாய், ஊரக வளா்ச்சி உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. முதல்வருடன் சோ்த்து மொத்தம் 43 அமைச்சா்கள் வரை இடம் பெற முடியும். இதில் பாஜகவுக்கு 22, சிவசேனைக்கு 12, தேசியவாத காங்கிரஸுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com