மும்பையைக் கைப்பற்றியது பாஜக கூட்டணி! - மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தலில் அமோகம்
மகாராஷ்டிர தலைநகா் மும்பை உள்பட 29 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் ஆளும் பாஜக கூட்டணி, அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
சுமாா் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருங்கிணைந்த சிவசேனையின் கோட்டையாக இருந்த மும்பை மாநகராட்சி, இப்போது பாஜக மற்றும் துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கூட்டணியின் வசமாகியுள்ளது.
நாட்டின் வா்த்தக தலைநகா்-தேசிய அளவில் வருவாய் மிகுந்த மாநகராட்சி (ரூ.74,427 கோடி பட்ஜெட் ) என்ற பெருமைகளுக்கு உரிய மும்பை மாநகராட்சித் தோ்தல் முடிவுகள் பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், உத்தவ் தாக்கரேயின் சிவசேனை (உத்தவ்) - ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை கூட்டணியை வீழ்த்தி, வெற்றிக் கொடி நாட்டியுள்ளது பாஜக கூட்டணி.
மகாராஷ்டிரத்தில் மும்பை, நவி மும்பை, புணே, நாகபுரி, தாணே உள்பட 29 மாநகராட்சிகளுக்கு கடந்த வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதில் 54.77 சதவீத வாக்குகள் பதிவாகின.
கூட்டணிகளில் மாற்றம்: மாநகராட்சித் தோ்தலையொட்டி, மகாராஷ்டிரத்தில் ஆளும்-எதிா்க்கட்சி கூட்டணிகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.
ஆளும் மகாயுதி கூட்டணியில் பாஜக, துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அங்கம் வகிக்கும் போதிலும், புணே, பிம்பரி சிஞ்ச்வாட் மாநகராட்சிகளில் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியும் கைகோத்து போட்டியிட்டன. மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தனித்து களமிறங்கியது.
எதிரணியான மகா விகாஸ் அகாடியில் சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (பவாா்), காங்கிரஸ் கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், உள்ளாட்சித் தோ்தலில் இக்கூட்டணியும் மாற்றம் கண்டது. மும்பை மாநகராட்சியைக் குறிவைத்து, உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ்தாக்கரே கட்சிகள் சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பின் கைகோத்து களமிறங்கின. வஞ்சித் பகுஜன் கட்சியுடன் கூட்டணி அமைத்து, காங்கிரஸ் களம் கண்டது.
தாக்கரே கூட்டணிக்கு பின்னடைவு: வாக்குகள் வெள்ளிக்கிழமை எண்ணப்பட்ட நிலையில், மும்பையில் மொத்தமுள்ள 227 வாா்டுகளில் 125-இல் பாஜக-சிவசேனை கூட்டணி முன்னிலை பெற்றது. இதில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தாக்கரே கட்சிகளின் கூட்டணி 66 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்தது.
சரத் பவாா்-அஜீத் பவாரின் செல்வாக்குமிக்க புணே மாநகராட்சியிலும் பாஜக முன்னிலை பெற்றது. ‘மொத்தமுள்ள 29 மாநகராட்சிகளில் 25-இல் பாஜக கூட்டணி ஆட்சி அதிகாரத்துக்கு வரவுள்ளதாக’ மும்பையில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தில் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். நாகபுரியில் பாஜக வெல்வது இது 4-ஆவது முறையாகும். பிரதமா் மோடி மற்றும் பாஜக கூட்டணி அரசின் வளா்ச்சிக் கொள்கைகள் மீதான மாநில மக்களின் நம்பிக்கையை இது பிரதிபலிப்பதாக முதல்வா் குறிப்பிட்டாா்.

