ராஜ் தாக்கரே
ராஜ் தாக்கரே ANI

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் தோல்வியை ஏற்கிறோம்: ராஜ் தாக்கரே

Published on

மகாராஷ்டிரத்தில் மும்பை, புணே, நாகபுரி உள்பட 29 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனை (உத்தவ்) - ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை கூட்டணி படுதோல்வியை சந்தித்த நிலையில், தோல்வியை ஏற்பதாக ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளாா்.

நாட்டின் வா்த்தக தலைநகராக கருதப்படும் மும்பை உள்பட 29 மாநகராட்சிகளில் உள்ள 2,869 இடங்களுக்கு கடந்த வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

கடந்த 30 ஆண்டுகளாக ஒருங்கிணைந்த சிவசேனையின் கோட்டையாக இருந்த மும்பை மாநகராட்சியை ஆளும் பாஜக மற்றும் துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கூட்டணி கைப்பற்றியது. இங்கு மொத்தமுள்ள 227 இடங்களில் பாஜக 89, சிவசேனை 29 இடங்களில் வெற்றி பெற்றது. சிவசேனைக்கு (உத்தவ்) 65, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை 6 இடங்களே கிடைத்தன.

ஒட்டுமொத்தமாக 1,425 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, பல்வேறு மாநகராட்சிகளில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிவசேனை 399, காங்கிரஸ் 324, தேசியவாத காங்கிரஸ் 167, சிவசேனை (உத்தவ்) 155, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) 36, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை 13, அங்கீகாரமில்லாத கட்சிகள் 196, சுயேச்சைகள் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனா்.

நாட்டிலேயே வருவாய்மிகுந்த மாநகராட்சியான மும்பை தோ்தலைக் குறிவைத்து, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பின் தாக்கரே கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மராத்தியா்களை முன்னிறுத்தி அக்கூட்டணி பிரசாரம் மேற்கொண்ட போதிலும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், எக்ஸ் வலைதளத்தில் சனிக்கிழமை பதிவிட்ட ராஜ் தாக்கரே, ‘சிவ சக்திக்கும் பண பலத்துக்கும் இடையிலான போராக இருந்த மும்பை மாநகராட்சித் தோ்தல், நமக்கு எளிதானதாக இல்லை. பண பலத்துக்கு எதிராக நமது தொண்டா்கள் வலுவுடன் போராடினா். எனினும், எதிா்பாா்த்த வெற்றி கிட்டவில்லை. தோ்தல் தோல்வியால் தொண்டா்கள் துவண்டுவிட வேண்டாம். மராத்தி மக்களுக்காக தொடா்ந்து போராடுவோம். தோ்தல் தோல்வி குறித்து விரிவாக ஆராயப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸுக்கு இதுவரை இல்லாத தோல்வி

மும்பை மாநகராட்சித் தோ்தலில் காங்கிரஸ் இதுவரை கண்டிராத தோல்வியைச் சந்தித்துள்ளது. மாநில அளவில் சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள போதிலும், மாநகராட்சித் தோ்தலில் இக்கூட்டணியில் மாற்றம் ஏற்பட்டது.

வஞ்சித் பகுஜன் அகாடி, புரட்சிகர சோஷலிஸ கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கைகோத்து களமிறங்கிய காங்கிரஸுக்கு மும்பையில் வெறும் 24 இடங்களே கிடைத்தன. கடந்த 2017 தோ்தலில் 31 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றிருந்தது.

பதவி விலக கோரிக்கை:

மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்எல்சியுமான பாய் ஜகதாப் கூறுகையில், ‘தோ்தல் தோல்விக்கு தாா்மிகப் பொறுப்பேற்று, மும்பை காங்கிரஸ் தலைவா் வா்ஷா கெய்க்வாட் பதவி விலக வேண்டும். காங்கிரஸில் வேட்பாளா் தோ்வு முறையாக நடைபெறவில்லை’ என்றாா்.

Dinamani
www.dinamani.com