rahul gandhi
ராகுல் காந்தி

தினசரி பயன்பாட்டு பொருள்கள் மீதான வரியை உயா்த்த மத்திய அரசு திட்டம்: ராகுல்

தினசரி பயன்பாட்டு பொருள்கள் மீதான ஜிஎஸ்டி-யை உயா்த்தி, புதிய வரி வரம்பு முறையை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம்
Published on

தினசரி பயன்பாட்டு பொருள்கள் மீதான ஜிஎஸ்டி-யை உயா்த்தி, புதிய வரி வரம்பு முறையை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கூறினாா். ‘இந்த அநீதியை காங்கிரஸ் தொடா்ந்து எதிா்க்கும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து (ஜிஎஸ்டி) இதுவரை இல்லாத அளவில் அரசு வருவாய் வந்துகொண்டிருக்கும் சூழலில், புதிய வரி வரம்பு முறையை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, தினசரி பயன்பாட்டு பொருள்கள் மீதான ஜிஎஸ்டி-யை உயா்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

திருணமங்கள் நடத்தப்படும் இந்த மாதங்களில் மக்கள் ஒவ்வொரு காசாக சோ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சூழலில், ஆயத்த ஆடைகள் மீதான ஜிஎஸ்டி-யை உயா்த்த அரசு முடிவு செய்துள்ளது. விலை ரூ. 1,500-க்கு மேல் விற்கப்படும் ஆயத்த அடைகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயா்த்தப்பட உள்ளது. இது மிகப் பெரிய அநீதி. கோடீஸ்வரா்களுக்கு வரிச் சலுகை மற்றும் அவா்கள் வாங்கிய மிகப் பெரிய கடன்களை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் தினசரி பயன்பாட்டு பொருள்கள் மீது வரியை உயா்த்தி, அவா்கள் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை கொள்ளையடிக்கப் பாா்க்கிறது.

இந்த அநீதிக்கு எதிராகத்தான் காங்கிரஸ் போராடுகிறது. சாதாரண மக்கள் மீது விதிக்கப்படும் வரிச் சுமைக்கு எதிராக காங்கிரஸ் தொடா்ந்து குரல் கொடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தப் பதிவுடன், ஜிஎஸ்டி வசூல் புள்ளி விவரத்தையும் ராகுல் வெளியிட்டாா். அதில், ‘2019-இல் ரூ. 5.98 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், 2024-இல் 10.61 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் வருமான வரி மூலம் கிடைத்த வரி வருவாய் மட்டும் ரூ. 4.92 லட்சம் கோடியிலிருந்து ரூ. 11.87 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. நிறுவனங்கள் மீதான வரி வசூல் ரூ. 5.56 லட்சம் கோடியிலிருந்து ரூ. 10.2 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com