
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிகழ்ச்சி நேற்று (டிச. 8) நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் ’பொது சிவில் சட்டம்: அரசியலமைப்பின் தேவை’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட நீதிபதி தினேஷ் பதாக் என்பவரும் கலந்துகொண்டார். இதில், சேகர் குமார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதி சேகர் குமார் யாதவ் பேசுகையில், “நமது நாட்டை ஹிந்துஸ்தான் என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஹிந்துஸ்தானில் வசிக்கும் பெரும்பான்மை மக்களின் விருப்பப்படியே இந்த நாடு இயங்கவேண்டும். அதுவே சட்டம். ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியாக இதை நீங்கள் சொல்வதா என யாரும் கேள்வி எழுப்ப முடியாது. இந்த சட்டம், பெரும்பான்மை மக்களுக்கு ஏற்ப செயல்படுகிறது. இதனை, குடும்பம் அல்லது சமூகத்துடன் பொருத்திப் பாருங்கள். பெரும்பான்மையினரின் நலனும் மகிழ்ச்சியையும் மேம்படுத்துவது மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்” என்று கூறினார்.
இஸ்லாமிய சமூகத்தின் பெயர் குறிப்பிடாமல் அவர்கள் குறித்து சர்ச்சையாகப் பேசிய அவர், “நமது சாஸ்திரங்களிலும் வேதங்களிலும் தெய்வமாக அங்கீகரிக்கப்படும் பெண்களை யாரும் அவமதிக்க முடியாது. நான்கு மனைவிகளை வைத்துக்கொள்ளவோ, ஹலால் செய்யவோ, முத்தலாக் சொல்லவோ யாரும் உரிமை கோர முடியாது. முத்தலாக் சொல்ல உரிமை உண்டு என்றும் பெண்களுக்கு பராமரிப்பு வழங்க வேண்டியதில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். இந்த உரிமை இனி வேலை செய்யாது.
நம் நாட்டில், சிறிய விலங்குகளை துன்புறுத்தக் கூடாது, எறும்புகளைக் கொல்லக் கூடாது என்று நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. அது நமக்குள் பதிந்திருக்கிறது. அதனால்தான் நாம் சகிப்புத்தன்மையுடனும் இரக்கத்துடனும் இருக்கிறோம். மற்றவர்கள் கஷ்டப்படும் போது அவர்களின் வலியை உணர்கிறோம்.
ஆனால் உங்கள் கலாசாரத்தில் சிறு வயது முதலே குழந்தைகள் மிருகவதையை பார்த்து வளர்கிறார்கள். அவர்கள் சகிப்புத்தன்மையுடனும் இரக்கத்துடனும் இருப்பார்கள் என்று எப்படி எதிர்பார்ப்பது?” என்றார்.
பொது சிவில் சட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து பேசியபோது, "பொது சிவில் சட்டம் என்பது விஹெச்பி, ஆர்எஸ்எஸ் மற்றும் ஹிந்து மதத்தை ஆதரிக்கும் சட்டமல்ல. நாட்டின் உச்ச நீதிமன்றமும் அதைப் பற்றிப் பேசுகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நேரம் எடுத்தது. அதேபோல, ஒரு நாடு, ஒரே சட்டம் என்பது செயல்படுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதனைத் தடுக்க முயற்சிப்பவர்கள் நீண்ட காலம் நீடிக்க மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.
நீதிபதி சேகர் குமார் யாதவ் இந்த நிகழ்வில் மட்டுமின்றி பலமுறை இவ்வாறு சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டில் பசுக்கள் ஆக்சிஜனை வெளியிடுவதாகவும், பசுவை தேசிய விலங்காக அறிவித்து, பசு பாதுகாப்பை ஹிந்துக்களின் அடிப்படை உரிமையாக அறிவிக்க வேண்டும் என்றும் பேசியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.