வயநாடு நிலச்சரிவு: குடும்பம், வருங்கால கணவரை இழந்த பெண்ணுக்கு அரசு வேலை

வயநாடு நிலச்சரிவில் ஒட்டுமொத்த குடும்பம் மற்றும் வருங்கால கணவரை இழந்த பெண்ணுக்கு அரசு வேலை
பலியான ஜென்சனுடன் ஸ்ருதி
பலியான ஜென்சனுடன் ஸ்ருதி
Published on
Updated on
2 min read

கல்பெட்டா: வயநாடு நிலச்சரிவில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்து நிராதரவாக இருந்தபோது, சாலை விபத்தில் எதிர்கால கணவரையும் இழந்து தவித்து வந்த ஸ்ருதிக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் ஒட்டுமொத்த வாழ்க்கையும் புரட்டிப்போடப்பட்ட ஸ்ருதி இன்று அரசு வேலையில் இணைந்து புது வாழ்வைத் தொடங்கியிருக்கிறார்.

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தை இழந்து, ஒரு சில வாரத்துக்குள், திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த வருங்கால கணவரும் சாலைவிபத்தில் உயிரிழந்த நிலையில், துயரத்துக்கு ஆளாகியிருந்த ஸ்ருதிக்கு அரசு வேலை வழங்குவது என்று அண்மையில் கேரள மாநில அரசு முடிவெடுத்து அறிவித்திருந்தது.

அதன்படி, அவருக்கு கேரள வருவாய்த் துறையில் கிளெர்க் வேலை வழங்கப்பட்டுள்ளது. இன்று அவர் அரசுப் பணியை ஏற்று அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். அரசுப் பணி வழங்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் ஸ்ருதி, அரசு வேலை வழங்கிய கேரள அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என கூறியிருக்கிறார்.

அண்மையில், வருங்கால கணவருடன் சென்றபோது விபத்தில் சிக்கி காயமடைந்த ஸ்ருதி, தனது உடல்நலப் பிரச்னைகளை எல்லாம் தாண்டி, தான் இந்த வேலையை உறுதியோடு செய்வேன் என்றும் உறுதியளித்திருக்கிறார்.

ஜூலை 30ஆம் தேதி சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது, தனது பெற்றோர், சகோதரி உள்பட ஒட்டுமொத்த குடும்பத்தில் 9 பேரை இழந்து நிராதரவாக நின்றார் ஸ்ருதி.

தனக்கு தூண் போல தாங்க ஒரே ஒரு உறவு இருக்கிறது என்று நினைத்திருந்த ஸ்ருதிக்கு அதையும் பிடுங்கிச் சென்ற சாலை விபத்து என்ற பெயரில் வந்த விதி.

ஸ்ருதியும், வருங்கால கணவர், 24 வயதான ஜென்சனும் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது நேரிட்ட விபத்தில், ஜென்சன் மரணமடைந்தார்.

ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் இழந்தபோது, ஒரே ஆறுதலாக இருந்து, மீளாத் துயரிலிருந்து ஸ்ருதியை மீட்டு வந்த ஜென்சன், சாலை விபத்தில் சிக்கி தலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவரது தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக, மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, ரத்தத் திட்டுகள் உருவானதால், அவர் மரணமடைந்திருக்கிறார்.

ஸ்ருதிக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கல்பெட்டாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

திருமண நிச்சயதார்த்தம்

ஸ்ருதி- ஜென்சன் இடையே ஜூன் 2ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது, 10 ஆண்டுகளுக்கும் மேலான காதல், திருமணம் வரை வந்ததால், இரு வீட்டாரும் மிகுந்த மகிழ்ச்சியோடு திருமணத்தை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், வெறும் இரண்டு மாதத்தில், ஒட்டுமொத்த வாழ்க்கையும் புரட்டிப்போட்டது. நிலச்சரிவு ஏற்பட்டு, குடும்பத்தில் 9 பேரை இழந்துவிட்டார் ஸ்ருதி. நிலச்சரிவு நேரிட்டபோது, கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் கணக்காளராக பணியாற்றி வந்ததால் அவர் மட்டும் தப்பியிருக்கிறார்.

ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்த ஸ்ருதிக்கு ஒரே ஒரு உறவாக நின்று ஒட்டுமொத்த வலிகளையும் கடக்க உதவியிருந்தது ஜென்சன்தான். குடும்பத்தை இழந்த ஸ்ருதிக்கு, அடுத்து திருமணம் நடந்தால்தான் அந்த இழப்பிலிருந்து வெளியே வருவார் என முடிவெடுத்த ஜென்சன், உடனடியாக திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்துவந்துள்ளார். ஆனால், செவ்வாயன்று இருவரும் சென்ற வேன், தனியார் பேருந்து மீது மோதியதில், வேனை ஓட்டி வந்த ஜென்சன் படுகாயமடைந்தார்.

தலையில் படுகாயம் ஏற்பட்டு, அவர் மருத்துவமனையிலேயே சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால், ஸ்ருதியின் திருமணம், குடும்பம் என்ற அடுத்த கனவும் சின்னாபின்னமான நிலையில்தான், தற்போது அவருக்கு புதுவாழ்வாக அரசு வேலை கிடைத்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com