
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான மிந்த்ரா நிறுவனத்தின் ரீஃபண்ட் (பணம் திருப்பிச் செலுத்துதல்) வசதியைப் பயன்படுத்தி ரூ. 1.1 கோடிக்கும் மேல் ஒரு கும்பல் மோசடி செய்துள்ளனர்.
மிந்த்ரா நிறுவனம் கடந்த மார்ச் முதல் ஜூன் முதல் ரூ. 1.1 கோடிக்கும் மேல் மோசடியான ஆர்டர்களால் ஏமாற்றப்பட்டதாக பெங்களூரு காவல்துறையில் புகாரளித்துள்ளனர்.
மிந்த்ரா நிறுவனம் எவ்வாறு ஏமாற்றப்பட்டது?
மிந்த்ரா ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் செயலியில் ஒரு மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் காலணிகள், ஆடைகள், கைப்பைகள், அழகுசாதனப் பொருள்கள், கடிகாரங்கள், நகைகள் என அதிக எண்ணிக்கையில் மொத்தமாக ஆர்டர் செய்துள்ளனர். இவை, அந்த நிறுவனத்தின் டெலிவரி வசதி மூலம் அந்தந்த முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதற்கான பணத்தை அவர்கள் ஆன்லைன் அல்லது நேரடியாக செலுத்தியுள்ளனர்.
ஆர்டர்கள் கையில் கிடைத்தப் பிறகு அவர்கள் அந்தப் பொருள்களின் எண்ணிக்கைக் குறைவாக உள்ளதாகப் புகார் எழுப்பியுள்ளனர். மேலும், அவர்கள் ஆர்டர் செய்த பொருள்கள் அல்லாமல் வேறு பொருள்கள் வந்ததாகவும், பொருள்கள் டெலிவரி செய்யப்படவில்லை என்றும் புகார் அளித்துள்ளனர்.
மிந்த்ரா நிறுவனம் அதன் செயலியில் வாடிக்கையாளர்கள் புகார் எழுப்பவும் அந்தப் பொருள்களுக்கான ரீஃபண்ட் (பணத்தைத் திரும்பப்பெறுவது) அல்லது வேறு பொருளை மாற்றிக் கொள்வதற்கான வசதியையும் வைத்துள்ளது. அதில், பொருள் குறைவாக, நிறம் மாறியிருப்பது, வேறு பொருள் கிடைப்பது போன்றவற்றிற்கு நாம் அந்த வசதியைப் பயன்படுத்தலாம்.
இதில், மோசடி கும்பலைச் சேர்ந்த நபர்கள் 10 காலணிகளை ஒரே நேரத்தில் ஆர்டர் செய்து அவை டெலிவரி கிடைத்தவுடன் அவற்றில் 5 மட்டுமே இருப்பதாக புகாரளித்து, அந்த 5 காலணிகளுக்கான பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர். இதுபோன்று, பல்வேறு பொருள்களுக்கான பணத்தை ஏமாற்றிப் பெற்றுள்ளனர்.
காவல்துறையில் புகார்
இதன் மூலம், பெங்களூரு நகரின் பல இடங்களில் இருந்து பெறப்பட்ட 5,529 ஆர்டர்களில் மோசடி நபர்கள் ஏமாற்றி பணம் பெற்றதாக மிந்த்ரா நிறுவன வடிவமைப்புத் துறை அமலாக்க அதிகாரி சர்தார் காவல்துறையினரிடம் புகாரளித்துள்ளார். இது அந்த நிறுவனத்தின் நிதி தணிக்கையின்போது கண்டறியப்பட்டுள்ளது.
மோசடியாளர்கள் வெவ்வேறு வங்கி கணக்குகளில் தங்களது ரீஃபண்ட் பணத்தினைப் பெற்றுள்ளனர். இதுதொடர்பாக நாடு முழுக்க ஏற்பட்ட இழப்புகளுக்கு மிந்த்ரா நிறுவனம் வழக்குத் தொடர முடிவெடுத்துள்ளனர். ஆனால், பெங்களூர் காவல்துறையினர் நகர்ப் பகுதிகளில் ஏற்பட்ட நஷ்டங்களுக்கு மட்டுமே புகாரளிக்குமாறு கூறியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் மாவட்டத்தின் ஜெய்ப்பூர் நகரிலிருக்கும் மோசடிக் கும்பல் இடம்பெற்றிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், பெரும்பாலான ஆர்டர்கள் ஜெய்ப்பூரிலிருந்து செய்யப்பட்டது. ஆனால், அந்தக் கும்பல் பெங்களூரு மற்றும் மற்ற மெட்ரோ நகரங்களின் முகவரியை டெலிவரிக்கு வழங்கியுள்ளனர். சில ஆர்டர்கள் டீக்கடைகள், தையல் கடைகள், மளிகைக் கடைகளுக்கு என மொத்தமாக டெலிவரி செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில், மீஷோ நிறுவனத்தில் இதுபோன்ற மோசடி ஆர்டர்கள் மூலம் ரூ. 5,5 கோடி வரை ஏமாற்றியதாக குஜராத்தின் சூரத் நகரில் 3 பேரை சைபர் போலீஸ் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.