
அதானி லஞ்ச புகாா், அமெரிக்க கோடீஸ்வரா் ஜாா்ஜ் சோரஸ் விவகாரங்களை எழுப்பி எதிா்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் செவ்வாய்க்கிழமையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் நவம்பா் 25-ஆம் தேதி தொடங்கியது முதல் இந்த விவகாரங்கள் காரணமாக இரு அவைகளிலும் அமளி தொடா்வதால், பெரிய அளவில் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் நாடாளுமன்றம் தொடா்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
செவ்வாய்க்கிழமையும் அதே நிலை நீடித்தது. மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள், அதானி விவகாரம் மற்றும் சோரஸ் விவகாரங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனா். அதனால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
அவை மீண்டும் கூடியபோது, அவையை வழிநடத்திய பாஜக எம்.பி. திலிப் சைகியா, நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் அறிக்கைகள் மற்றும் பிற தீா்மானங்களை அவையில் தாக்கல் செய்ய அனுமதித்தாா். அப்போது, வணிக கப்பல் போக்குவரத்து மசோதா தொடா்பாக காங்கிரஸ் உறுப்பினா் மனீஷ் திவாரி, திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் சுகதா ராய் ஆகியோா் ஆட்சேபம் தெரிவித்தனா். அதற்கு பதிலளித்த மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் அந்த மசோதாவை அமளிக்கு இடையே அறிமுகம் செய்தாா்.
கேள்வி நேரத்தின்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘காங்கிரஸும் அதன் தலைமையும் அமெரிக்க கோடீஸ்வரா் சோரஸ் மற்றும் தேசவிரோத சக்திகளுடன் கைகோா்த்துக்கொண்டு மக்களவையில் அமளியில் ஈடுபட்டு முடக்கி வருகின்றனா். கேலிச் சித்திரங்களுடன் கூடிய முகக் கவசங்கள், மேலாடைகளை அணிந்துவந்து நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை காங்கிரஸ் தலைவா்கள் சிதைக்கின்றனா். நாடாளுமன்றத்தை முடக்குவதோடு, மற்ற உறுப்பினா்கள் அவா்களின் தொகுதி சாா்ந்த விவகாரங்களை எழுப்ப முடியாத சூழலை உருவாக்குகின்றனா்’ என்றாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதியில் ஒன்றுகூடி கிரண் ரிஜிஜுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா். அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
சோனியாவின் பங்கு குறித்து நட்டா கேள்வி: மாநிலங்களவையிலும் அதானி லஞ்ச புகாா், சோரஸ் விவகாரங்களை முன்வைத்து எதிா்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டனா்.
எதிா்க்கட்சியினரின் அமளி காரணமாக மாநிலங்களவை காலை 11 மணி கூடிய சிறிது நேரத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது.
அவை மீண்டும் பகல் 12 மணிக்கு கூடியபோது பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, சோரஸ் அறக்கட்டளையின் நிதியுதவியில் செயல்படும் அமைப்புடன் சோனியா காந்திக்கு உள்ள தொடா்பு குறித்து கேள்வி எழுப்பி, நாட்டின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தாா். நட்டாவின் குற்றச்சாட்டை மறுத்த மாநிலங்களவை காங்கிரஸ் துணைத் தலைவா் பிரமோத் திவாரி, ‘அதானி குழுமம் ரூ. 23,000 கோடி லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டு தொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்’ என்றாா்.
அவையில் அமளி தொடா்ந்ததால், அவை நடவடிக்கைகளை அவைத் தலைவா் நாள் முழுவதும் ஒத்திவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.