
ஆக்ரா: ஆக்ராவில் இந்திய ராணுவத்தின் 20வது ரத் ரெஜிமெண்டில் பணியாற்றி வந்த தேவேந்திர சிங் (48) தனது மகளின் திருமணத்துக்கு 2 நாள்களுக்கு முன்பு வீரமரணம் அடைந்த நிலையில், அவருடன் பணியாற்றிய வீரர்கள், மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார்கள்.
தந்தை இறந்ததால் திருமணத்தை எவ்வாறு நடத்துவது என்று கதிகலங்கி நின்றிருக்கிறது தேவேந்திர சிங் குடும்பம்.
திருமண நிகழ்ச்சிகளை நிறுத்திவிடலாமா என்று கூட யோசித்திருக்கிறார்கள். இது பற்றி தகவல் அறிந்த அவரது முன்னாள் ராணுவ நண்பர்கள், ஒன்று சேர்ந்து நண்பர் மகளின் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள்.
ராணுவ உடையில் வந்த தேவேந்திர சிங் நண்பர்கள், உறவினர்களுக்குத் தேவையான வசதிகளை செய்துகொடுப்பது முதல் மகளின் கையைப் பிடித்து கன்னியாதானம் செய்வது வரை அனைத்தையும் முன்னின்று நடத்திக்கொடுத்திருக்கிறார்கள்.
தாமாக முன்வந்து ராணுவத்திலிருந்து ஓய்வுபெறுவதாக கடந்த மாதம் பணியிலிருந்து வந்த தேவேந்திர சிங், மகளின் திருமண ஏற்பாடுகளின்போது கார் விபத்தில் பலியானார்.
திருமண வீடே களையிழந்தது, மணமகள் ஜோதியை கவலையும் கண்ணீரும் சூழ்ந்தது. ஆனால் இந்த நாட்டையே காக்கும் வீரர்கள், தனது நண்பரின் வீட்டைக் காக்கத் தவறுவார்களா.
இதுபற்றி அறிந்து, தேவேந்திர சிங்குடன் பணியாற்றிய ராணுவ வீரர்கள் ஓடோடி மதுரா வந்தார்கள். பட்டாலியனில் பணியாற்றிய 5 வீரர்கள் பஞ்சாப்பிலிருந்து மதுரா வந்து, தேவேந்திர சிங் இருந்து செய்ய வேண்டிய பணிகளை செய்து முடித்தார்கள்.
திருமணத்தை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்றுதானே தேவேந்திர சிங் விரும்பினார். அதனை நிறைவேற்றத்தான் நாங்கள் வந்தோம் என்கிறார்கள் ஒருமித்த குரலில்.
திருமண செலவுகள் முதல் விருந்திகளை வரவேற்று, அவர்கள் வழக்கப்படி கன்னியாதானம் செய்துகொடுத்தனர்.
மணமகனும் ராணுவ வீரர்தான், அவர் ஹத்ராஸிலிருந்து பராத் முறையில் சிறப்பாக வரவேற்கப்பட்டு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேவேந்திர சிங் உறவினர் கூறுகையில், திருமணமே நடக்குமா என்று நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் அவரது நண்பர்கள் ஓடோடி வந்து மிகச் சிறப்பாக நடத்திக்கொடுத்தனர். தற்போது அவர்களுடனான உறவும் எங்களுக்கு மிகப்பெரிய துணையாக மாறிவிட்டது என்கிறார்கள் கண்ணீரைத் துடைத்தபடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.