'இன்னும் பயத்தில் வாழ்கின்றனர்' - ஹத்ராஸ் சிறுமி குடும்பத்தினருடன் ராகுல் சந்திப்பு!

ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு.
'இன்னும் பயத்தில் வாழ்கின்றனர்' - ஹத்ராஸ் சிறுமி குடும்பத்தினருடன் ராகுல் சந்திப்பு!
Published on
Updated on
1 min read

ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த 19 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில நாள்களிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்போது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஹத்ராஸ் சிறுமியின் குடும்பத்தினரை ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

சுமார் 35 நிமிடங்கள் அவர்களுடன் உரையாடிய அவர், வெளியில் காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசாமலேயே சென்றுவிட்டார்.

பின்னர் இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

'இன்று நான் ஹத்ராஸுக்குச் சென்றேன். 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வெட்கக்கேடான, துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்தேன். இந்த சந்திப்பின்போது அவர்கள் சொன்ன விஷயங்கள் என்னை உலுக்கியது.

அந்த குடும்பத்தினர் இன்னும் பயத்தில் வாழ்கிறார்கள். அவர்கள் குற்றவாளிகள்போல் நடத்தப்படுகிறார்கள். அவர்களால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. அவர்கள் எல்லா நேரங்களிலும் துப்பாக்கிகள், கேமராக்களின் கண்காணிப்பில் உள்ளனர்.

பாஜக அரசு அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றவில்லை. அரசு வேலை வழங்கப்படும், வேறு இடத்தில் வீடு வழங்கப்படும் என எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்குவதற்கு பதிலாக, அரசு அந்த குடும்பத்தினருக்கு பல்வேறு கொடுமைகளைச் செய்து வருகிறது. மறுபுறம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்.

இந்தக் குடும்பத்தின் விரக்தி, பாஜகவால் தலித்துகள் மீது நடத்தப்படும் கொடுமைகளின் உண்மையைக் காட்டுகிறது.

ஆனால் இந்த குடும்பத்தை இந்த நிலையிலே விட்டுவிடமாட்டோம். அவர்களுக்கு நீதி கிடைக்க முழு பலத்துடன் போராடுவோம்' என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதன்பின்னரே அவர், ஹத்ராஸ் சென்று அந்த குடும்பத்தினரை சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடிதத்தில் பெற்றோர், 'எனது மகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரது முதுகுத்தண்டு உடைக்கப்பட்டு, உடலும் சிதைக்கப்பட்டது. பின்னர், அன்று இரவோடு இரவாக எனது குடும்பத்தினரின் அனுமதியின்றி மாவட்ட நிர்வாகத்தால் கொல்லப்பட்டார். பிற்பகல் 2.30 மணியளவில் அவரது உடல் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டது. இன்றுவரை எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் யாருடைய உடல் எரிந்தது என்றுகூட தெரியாது' என்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், தாங்கள் முழு நேரமும் சிஆர்பிஎப் படையினரின் கண்காணிப்பில் இருப்பதாகவும் வேலைக்குக்கூட வெளியில் செல்ல முடியவில்லை, ஆனால், குற்றவாளிகள் ஜாமீன் பெற்று வெளியில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.