அல்லு அர்ஜுன் கைது: மத்திய அமைச்சர்கள் கண்டனம்!

அல்லு அர்ஜுன் கைது: காங். அரசின் நடவடிக்கைக்கு மத்திய அமைச்சர்கள் கண்டனம்!
அல்லு அர்ஜுன் கைது: மத்திய அமைச்சர்கள் கண்டனம்!
PTI
Published on
Updated on
1 min read

நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், தெலங்கானா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளிக்கச் சென்ற 35 வயதான பெண்மணி ஒருவர், அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த திரையரங்குக்கு அல்லு அர்ஜுன் திடீரென வருகை தந்ததாகவும் அப்போது அவரை காணும் ஆவலில் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டதால், அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் அவதிக்குள்ளாகினர். அதில் அந்த பெண் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில், திரையரங்க நிர்வாகம், அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. இந்த வழக்கில் திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை(டிச. 13) அல்லு அர்ஜுனும் கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் அல்லு அர்ஜுன் நேற்றிரவு சிறைக்குள் கழித்த நிலையில், தெலங்கானா உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சனிக்கிழமை(டிச. 14) அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில், அல்லு அர்ஜுன் கைது நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருப்பதாவது, “கலைத்துறைக்கு காங்கிரஸ் அரசு உரிய மரியாதை அளிப்பதில்லை. அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டிக்கும் நடவடிக்கை மூலம், இது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட அசம்பாவிதம், மாநில மற்றும் உள்ளூர் நிர்வாகத்தால் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாததன் விளைவே... இப்போது வேறொருவர் மீது பழி சுமத்துவதற்காக, பொதுவெளியில் கவனத்தை ஈர்க்கும் விதத்திலான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.”

“இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்ய வேண்டும். திரைத்துறையினர் மீது தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்பதற்கு பதிலாக, தெலங்கானா அரசு சம்பவத்தன்று பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாகக் கையாளாமல் இருந்தவர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டில் இதே பாணியிலான நடவடிக்கைகள் தொடருவது கவலையளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

அதேபோல, மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் மற்றும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் ‘பாரத் ராஷ்டிரிய சமிதி(பிஆர்எஸ்)’ கட்சியின் செயல்தலைவரும் எம்.எல்.ஏ.வுமான கே.டி. ராம ராவ் உள்பட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும், அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.