ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பொய் வழக்குப் போடும் போலீஸார் மீது வழக்குத் தொடர அரசு அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

பொய் வழக்கு போடும் போலீஸார் மீது வழக்குத் தொடர அரசு அனுமதி தேவையில்லை என உச்ச நீதிமன்ற தீர்ப்புப் பற்றி..

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :14 டிசம்பர் 2024, 10:37 am

DIN

நாட்டில் தனிப்பட்ட காரணங்களுக்காக தனிநபர்களுக்கு எதிராக பொய் வழக்குப் பதிவு செய்து, போலியான ஆதாரங்களை தயாரிக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அரசு அனுமதி தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது, ஒரு தனிநபருக்கு எதிராக பொய் வழக்குப் பதிவு செய்யும் காவல்துறை அதிகாரி, ஒருபோதும் தனது அலுவலகப் பணி என்ற போர்வையில், அவர் மீது தொடரப்படம் வழக்கிலிருந்து விலக்கு கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறது.

ஏனென்றால் ஒரு தனிநபர் மீது போலியாக வழக்குப் பதிவு செய்வதும், அது தொடர்பாக போலியான ஆதாரம் அல்லது ஆவணங்களைத் தயாரிப்பதும் ஒரு பொதுதுறையில் பணியாற்றும் அதிகாரியின் அலுவலகப் பணியின் ஒரு பகுதியாக இருக்கவே முடியாது என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 197 அளிக்கும் பாதுகாப்பை தங்கள் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தும் அல்லது துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகள் பயன்படுத்த அனுமதியளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

அரசுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள், தங்களது கடமையின்போது இழைக்கும் ஏதேனும் தவறுகளுக்காக அவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் பொதுத் துறை ஊழியர்களுக்காக கொண்டுவரப்பட்டதே குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 197 ஆகும். இந்த சட்டப்படி, இதுபோன்ற அரசு ஊழியர்கள் மீது சட்ட ரீதியாக வழக்குத் தொடர அரசு அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும்.

மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், தனி நபர்களிடம் வெற்றுக் காகிதங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு தவறான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது அல்லது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து அல்லது செய்துவிடுவோம் என மிரட்டுவது போன்றவற்றின் மூலம், தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது அல்லது துஷ்பிரயோகம் செய்ய இந்த சட்டம் ஒருபோதும் அனுமதிக்காது. குற்றம்சாட்டப்பட்டவர்களை சட்டத்துக்கு விரோதமாக காவலில் வைத்திருப்பது, ஒருவர் மீது போலியான வழக்குகளைப் பதிவு செய்து போலியான ஆதாரம் அல்லது ஆவணங்களை தயாரிப்பது, அவர்களை துன்புறுத்தும் வகையில் இருப்பிடங்களில் சோதனை நடத்துவது போன்றவற்றில் ஈடுபடுவோர், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 197 அளிக்கும் பாதுகாப்பின் கீழ் வர முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது.

எப்போது ஒரு காவல்துறை அதிகாரி மீது பொய்யான வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுகிறதோ, அப்போதே அவர் சட்டப்பிரிவு 197ன் பயனை அடைய முடியாது என்றும், மக்கள் அல்லது தனி நபர்கள் மீது போலியான வழக்குத் தொடர்ந்து ஆதாரங்களை உருவாக்குவது அல்லது போலியான ஆவணங்களைத் தயாரிப்பது என்பது அலுவல் ரீதியான பணியாக முடியாது என்பதால், இந்த சட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒருவேளை அவ்வாறு செய்ய அனுமதித்தால், மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய காவல்துறையினர், அந்த பதவியில் இருந்துகொண்டு சட்டத்துக்கு விரோதமான, மிகத் தவறான செயல்களை செய்வதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய நபர் மீது, கொலை நடந்த அதே நாளில் மத்தியப் பிரதேசத்தில் மதுபானங்களைக் கடத்தியதாக பொய் வழக்குத் தொடரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.