

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பத்திரிகையாளரை தெலுங்கு நடிகர் மோகன் பாபு ஞாயிற்றுக்கிழமை சந்தித்து மன்னிப்பு கேட்டார்.
அப்போது இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்த சந்திப்பின்போது மோகன் பாபுவின் மூத்த மகன் மஞ்சு விஷ்ணு உடனிருந்தார். இதுகுறித்து பத்திரிகையாளர் ரஞ்சித் குமார் கூறுகையில், அவர் (மோகன் பாபு) என்னிடமும், எனது குடும்பத்தினரிடமும் மற்றும் ஒட்டுமொத்த பத்திரிகையாளர் சகோதரர்களிடமும் மன்னிப்பு கேட்டார்.
குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன் தனது வீட்டிற்கு வருவதாகவும் நடிகர் மோகன் பாபு கூறினார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். தெலுங்கு நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மோகன் பாபு தனது இளைய மகன் மனோஜ் மஞ்சு மீது ரச்சகொண்டா காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தார்.
இரண்டாவது மகன் மஞ்சு மனோஜ் தனது வீட்டில் அத்துமீறி நுழைந்து ஊழியர்களை மிரட்டியதாக தெரிவித்திருந்தார். ஆனால் அதை மறுத்த மஞ்சு மனோஜ், பதிலுக்கு அவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து மோகன் பாபுவின் வீட்டுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்து, சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மோகன் பாபுவின் மூத்த மகன் மஞ்சு விஷ்ணு வெளிநாட்டில் இருந்து ஹைதராபாத்துக்கு விரைந்தார். இதனிடையே இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரை மோகன் பாபு தாக்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.