நாட்டை உலுக்கிய தற்கொலை வழக்கு: மனைவி உள்பட 3 பேர் கைது!

பெங்களூரு ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கில் மூவர் கைது.
கைது செய்யப்பட்ட நிகிதா சிங்கானியா, அவரது தாயார் நிஷா சிங்கானியா மற்றும் சகோதரர் அனுராக் சிங்கானியா.
கைது செய்யப்பட்ட நிகிதா சிங்கானியா, அவரது தாயார் நிஷா சிங்கானியா மற்றும் சகோதரர் அனுராக் சிங்கானியா.
Published on
Updated on
2 min read

கர்நாடகத்தில் பிரிந்து சென்ற மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக ஐடி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரில் உள்ள மஞ்சுநாத் லே-அவுட் பகுதி குடியிருப்பில் வசித்து வந்த அதுல் சுபாஷ் (34) என்ற ஐடி ஊழியர், தனது வீட்டில் கடந்த திங்களன்று (டிச. 9) சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலை செய்துகொண்ட அவர், தன்னை விட்டுப் பிரிந்த மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினரால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்வதாக 25 பக்கங்கள் கொண்ட கடிதத்தை எழுதி வைத்திருந்தார்.

அந்தக் கடிதத்தில், அதுல் வரதட்சனை கேட்டுத் தொந்தரவு செய்ததாக அவர் மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்த அவரது மனைவி குடும்பத்தினர் ரூ. 3 கோடி வரை பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். மேலும், தனது 4 வயது மகனைப் பார்ப்பதற்கான உரிமையை வழங்க தனியே ரூ. 30 லட்சம் வரை கேட்டதாகவும் அதுல் குறிப்பிட்டிருந்தார்.

தற்கொலைக்கு முன்னர் அந்தக் கடிதத்துடன் சேர்த்து, சில விடியோக்களையும் பதிவு செய்திருந்த அவர் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கினைத் தீர்த்துவைக்க ரூ. 5 லட்சம் லஞ்சம் கேட்டதாகயும், திருமணச் சட்டங்கள் ஆண்களுக்கு எதிராக இருப்பதாகவும் பேசியிருந்தார். அத்துடன், தனது அறை சுவற்றில் ‘நீதி கிடைக்க வேண்டும்’ என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்தார்.

தற்கொலை செய்துகொண்ட அதுல் சுபாஷ் (34)
தற்கொலை செய்துகொண்ட அதுல் சுபாஷ் (34)

அவரது விடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அதுலின் சகோதரர் பிலாஸ் குமார் புகாரளித்தார். அவர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த வியாழனன்று (டிச. 12) நிகிதாவைத் தேடி பெங்களூரு காவல்துறையினர் அவர் வசிக்கும் உ.பி.யிலுள்ள ஜான்பூருக்கு விரைந்தனர். அங்கு அவரின் வீடு பூட்டியிருந்ததால் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது அவர்கள் குடும்பமாக முந்தைய நாள் இரவே வெளியே சென்றதாகக் கூறினர்.

தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் துணையுடன் அவர்களைத் தேடிவந்த பெங்களூரு நிகிதாவை ஹரியானா மாவட்டத்தின் குருகிராம் நகரிலும், அவரது தாயார் நிஷா சிங்கானியா மற்றும் அவரது சகோதரர் அனுராக் சிங்கானியா ஆகியோரை உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரிலும் வைத்து நேற்று (டிச. 14) கைது செய்தனர்.

இந்த வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியான சுஷில் சிங்கானியா இன்னும் கைது செய்யப்படவில்லை.

கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை, நீதிமன்றம் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கில் நீதி கிடைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பெங்களூரு காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com