
பிரதமர் மோடி ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதத்தைத் தவறாகத் திரித்து மக்களை ஏமாற்றி வருவதாக மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று விமர்சித்துள்ளார்.
1951ல் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாதபோது, நேரு அரசியலமைப்பை மாற்றுவதற்கு ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார் என பிரதமர் மோடி கூறியதை குறிப்பிட்டுப் பேசிய கார்கே, ”அந்த மாற்றத்தை ஏன் கொண்டு வந்தார் என்று அவரிடம் கேட்க விரும்புகிறேன். முதல் திருத்தம் தற்காலிக பாராளுமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. அதில் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியும் இருந்தார். அது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உதவுவதற்காக செய்யப்பட்டது.
பிரதமர் மோடி நிகழ்காலத்தில் இல்லாமல் கடந்த காலத்தில் வாழ்ந்து வருகிறார். ஜனநாயகத்தை வலுப்படுத்த அவர் செய்த தற்போதைய சாதனைகளை பட்டியலிட்டால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும், பிரதமர் மோடியை முதல் தர பொய்யர் எனக் கூறிய கார்கே, “முதலில் ரூ. 15 லட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. இவர்கள் நாட்டைத் தவறாக வழிநடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். நமது அரசியலமைப்பை வலுப்படுத்த கடந்த 11 ஆண்டுகளாக என்ன செய்தார் என பிரதமர் கூறவேண்டும்.
மதத்தின் மீதான பக்தி ஆன்மாவின் அமைதிக்கு அழைத்துச் செல்லும். ஆனால், அரசியலில் தனிநபர் வழிபாடு சீரழிவுக்கும் சர்வாதிகாரத்திற்குமே இழுத்துச் செல்லும். மோடி சர்வாதிகாரியாகத் தயாராகிவிட்டார்” என கடுமையாக விமர்சித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.