அம்பேத்கருக்கு எதிரானது காங்கிரஸ்; பாஜக அல்ல: அமித் ஷா

அம்பேத்கரின் புகழை உலகம் முழுவதும் நிலைநாட்டியது பாஜக அரசுதான் என்றார் அமித் ஷா
அமித் ஷா
அமித் ஷாபடம் | எக்ஸ்
Published on
Updated on
2 min read

பாரதிய ஜனதா கட்சி அம்பேத்கருக்கு எதிரானது அல்ல என்றும் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமே அம்பேத்கருக்கு எதிராக செயல்படுவதாகவும் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது சர்ச்சையான நிலையில், அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தில்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன் அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அமித் ஷா பேசியதாவது, அம்பேத்கர் குறித்த எனது முழு பேச்சையும் கேட்க வேண்டும். அதன் பிறகு மற்றவர்கள் பேச வேண்டும். நாடாளுமன்றத்தில் எனது பேச்சை காங்கிரஸ் கட்சியினர் திரித்துக் கூறுகின்றனர். எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டும் வைத்து பேசுவதா?

அம்பேத்கரின் கொள்களைகளை உயர்த்திப்பிடிப்பது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுதான். அம்பேத்கரின் புகழை உலகம் முழுவதும் நிலைநாட்டியது பாஜக அரசுதான். நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.

காங்கிரஸ் என்ன செய்தது?

நேரு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மட்டுமே அம்பேத்கரை குறைத்து மதிப்பிட்டுள்ளனர். 1951, 1955-ல் நடைபெற்ற தேர்தலில் அம்பேத்கரை 2 முறை தோல்வி அடையச் செய்தது காங்கிரஸ்.

காங்கிரஸ் கட்சியை விட பாஜக அரசுதான் அம்பேத்கரின் சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு நன்மை செய்யும் வகையிலான திட்டங்களை வகுத்தது பாஜகதான்.

காங்கிரஸ் ஆட்சியில் அம்பேத்கருக்கு எந்தவொரு நினைவகமும் ஏற்படுத்தவில்லை. மற்ற கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு அம்பேத்கருக்கு நினைவுச் சின்னம் எழுப்பினர். ஆனால் காங்கிரஸ் என்ன செய்தது?

காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்குள்ளாகவே பாரத ரத்னா விருதைக் கொடுத்துக்கொண்டனர். நேருவுக்கு 1955-ல் பாரத ரத்னா கிடைத்தது. இந்திரா காந்திக்கு 1971ஆம் ஆண்டில் கிடைத்தது. ஆனால், அம்பேத்கருக்கு 1990ஆம் ஆண்டில்தான் பாரத ரத்னா அறிவிக்கப்பட்டது.

சட்டப்படி நடவடிக்கை

நான் ராஜிநாமா செய்ய வேண்டும் என்கிறார் மல்லிகார்ஜுன கர்கே. அது அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றால், அதனை செய்யத் தயார். ஆனால் அது அவரின் பிரச்னைகளுக்குத் தீர்வாகாது. அவர் அதே வரிசையில்தான் (எதிர்க்கட்சி வரிசையில்) அடுத்த 15 ஆண்டுகளுக்கு அமர்ந்துகொண்டிருப்பார்.

காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு நாடாளுமன்றத்துக்கு வெளியேயும், உள்ளேயும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ள வழிகள் குறித்து ஆராயப்படும். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை திரித்துக் கூறியது காங்கிரஸ். என்னுடைய பேச்சையும் செய்யறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் தவறாக சித்திரித்து வெளியிட்டனர். தற்போது என்னுடைய நாடாளுமன்ற உரையை திரித்துப் பேசுகின்றனர்.

பத்திரிகையாளர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். என்னுடைய முழு உரையையும் மக்களுக்கு ஒளிபரப்புங்கள். பாஜக ஆட்சியில் இருந்தபோதெல்லாம், அம்பேத்கர் கருத்தை பிரசாரம் செய்தது. இடஒதுக்கீட்டை வலுப்படுத்த பாஜக பாடுபட்டது. ராகுல் காந்தியின் அழுத்தத்தால் அம்பேத்கருக்கு எதிரான பிரசாரத்தில் கார்கே இணைந்துள்ளார்.

இதையும் படிக்க | அம்பேத்கர் இல்லாவிட்டால் மோடி டீதான் விற்றுக் கொண்டிருந்திருப்பார்! சித்தராமையா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com