
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த பாரதிய ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகப் பேசி, நலம் விசாரித்தார்.
போராட்டத்தில் காயமடைந்த பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2 நாள்கள் விவாதத்தின் முடிவில், கடந்த செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்பேத்கர் குறித்து பேசியது சர்ச்சையானது.
இதனைக் கண்டித்து, அம்பேத்கருக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் பேசிய அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவரை பாஜக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின்போது ஆளும் கட்சி எம்.பி.க்களுக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில், பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்ததில் தலையில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
ராகுல் காந்தி தள்ளிய ஒரு எம்.பி. தன் மீது விழுந்ததால் தனக்கு காயம் ஏற்பட்டதாக பிரதாப் சந்திர சாரங்கி தெரிவித்தார். இதேபோன்று முகேஷ் ராஜ்புத் எம்.பி.க்கும் காயம் ஏற்பட்டது.
இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களுடன் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது,
''பிரதாப் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோரை சந்தித்தேன். அவர்கள் வேதனையில் உள்ளனர்.
நாட்டின் நாடாளுமன்றம் இன்று அவமானப்படுத்தப்பட்டுள்ளது; அதற்கு ராகுல் காந்தி ஒருவர் தான் பொறுப்பு.
அவர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்? அவர் நாட்டு மக்களிடமும், நாடாளுமன்றத்திடமும், இரு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதியற்றவர்! -பாஜக விமர்சனம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.