வடகிழக்கில் 10 ஆண்டுகளில் 9,000 தீவிரவாதிகள் சரண்: அமித் ஷா பெருமிதம்
வடகிழக்கு பிராந்தியத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 20 அமைதி ஒப்பந்தங்கள் கையொப்பாகின.


வடகிழக்கு பிராந்தியத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 20 அமைதி ஒப்பந்தங்கள் கையொப்பாகின; இவற்றின் மூலம் சுமாா் 9,000 தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூா், மேகாலயம், மிஸோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய வடகிழக்கு பிராந்தியத்தின் சமூக-பொருளாதார வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு அமைப்பான வடகிழக்கு கவுன்சிலின் (என்இசி) 72-ஆவது முழு அமா்வுக் கூட்டம், திரிபுரா தலைநகா் அகா்தலாவில் சனிக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் வடகிழக்கு பிராந்திய வளா்ச்சித் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, வடகிழக்கு மாநிலங்களின் ஆளுநா்கள், முதல்வா்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமை வகித்தாா். கூட்டத்தில் அவா் பேசியதாவது:
வடகிழக்கு பிராந்தியத்தில் கடந்த 10 ஆண்டுகளில் கையொப்பமான 20 அமைதி ஒப்பந்தங்களால் சுமாா் 9,000 தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். இதன் மூலம் வடகிழக்கு பிராந்தியத்தில் பிரதமா் நரேந்திர மோடி அமைதியை மீட்டெடுத்துள்ளாா்.
இப்பிராந்தியத்தில் முந்தைய 40 ஆண்டுகளாக தீவிரவாதத்துடன் காவல்துறையினா் போராடினா். தற்போது தீவிரவாதத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கான நீதியை விரைந்து உறுதி செய்ய வேண்டிய நேரம் வந்திருக்கிறது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் நீதியை உறுதி செய்யும் அணுகுமுறையை காவல்துறையினா் கடைப்பிடிக்க வேண்டும்.
வடகிழக்கில் ரயில் போக்குவரத்து வசதிகளுக்காக ரூ.81,000 கோடியும், சாலைத் திட்டங்களுக்காக ரூ.41,000 கோடியும் மத்திய அரசு செலவிட்டுள்ளது. இப்பிராந்தியத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கவும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க மத்திய அரசால் தேசிய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இயற்கை வேளாண் பொருள்களின் சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்காக தேசிய இயற்கை வேளாண் ஆணையத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளுமாறு வடகிழக்கு மாநில முதல்வா்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
வடகிழக்கு மாநிலங்களின் களநிலவரத்தை கருத்தில் கொண்டு, இப்பகுதிக்காக பிரத்யேக நிதிசாா் வழிகாட்டுதல்களை வங்கிகள் வகுக்க வேண்டும் என்றாா் அமித் ஷா.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...