
புஷ்பா-2 படத்தின் சிறப்பு திரையிடலின்போது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனிடம் சிக்கட்பள்ளி காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை 3 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அல்லு அர்ஜுனுக்கு காவல்துறை கடந்த திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, சிக்கட்பள்ளி காவல் நிலையத்துக்கு புதன்கிழமை காலை 11 மணியளவில் அல்லு அர்ஜுன், தனது தந்தை அல்லு அரவிந்த் மற்றும் வழக்ககுரைஞர்களுடன் வந்தார்.
ஹைதராபாத் மத்திய மண்டல துணை ஆணையர் தலைமையிலான காவல் துறையினர், பிற்பகல் 2.45 வரை அவரிடம் விசாரணை நடத்தினர். கூட்டநெரிசல் சம்பவம் குறித்து காவல் துறை எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததாக கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுனின் வருகையையொட்டி காவல்நிலையத்துக்கு செல்லும் சாலைகளில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
புஷ்பா-2 திரைப்படம் கடந்த 5-ஆம் தேதி வெளியானது. அதற்கு முந்தைய நாள் இரவு, ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் நடைபெற்ற படத்தின் சிறப்பு திரையிடலுக்கு அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அவரைக் காண முண்டியடித்த ரசிகர்களால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 35 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அல்லு அர்ஜுன் கடந்த 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார். தெலங்கானா உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனில் 14-ஆம் தேதி அவர் விடுவிக்கப்பட்டார்.
இவ்விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக அல்லு அர்ஜுனுக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி மாநில சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவித்தார். திரையரங்கில் நடைபெற்ற முழு நிகழ்வுகளையும் விடியோவாக ஹைதராபாத் காவல்துறை வெளியிட்டது.
இதற்கிடையே, நகரின் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அல்லு அர்ஜுனின் வீட்டுக்குள் போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைந்து, கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாவலர் கைது: அல்லு அர்ஜுன் வருகையின்போது திரையரங்கில் தனியார் பாதுகாவலர்களை ஏற்பாடு செய்த அல்லு அர்ஜுனின் பாதுகாவலர் அந்தோனி கைது செய்யப்பட்டுள்ளார்.
அல்லு அர்ஜுனின் காரை நெருங்கவிடாமல் ரசிகர்களை இவர் தள்ளியதாலேயே சம்பவ இடத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.