சாக்லேட்தான் உணவு: கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் மன்மோகன் சிங்கின் ஏழ்மை நிலை!
நாட்டின் சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதியான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ளார்.
1950 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உதவித் தொகை மூலம் படித்துக்கொண்டிருந்தபோது அவருக்கு இருந்த ஒரே பிரச்னை பணம்தான். இதற்காக அக்காலகட்டத்தில் உணவைக் கூட தவிர்த்துவிட்டு, வெறும் சாக்லேட்டை (6 துண்டுகள் உடைய கேட்பெரி) மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டுள்ளார்.
அவர் படிக்கும் காலத்தில், பஞ்சாப் பல்கலைக் கழகம் வழங்கிய உதவித்தொகை ஆண்டுக்கு 160 பவுண்ட்ஸ் மட்டுமே. ஆனால், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கட்டணம் உள்பட தங்கும் செலவுக்கு ஆண்டுக்கு 600 பவுண்ட்ஸ் தேவைப்படும்.
இதனால் மீதத்தொகைக்கு குடும்பத்தைச் சார்ந்தே இருந்துள்ளார் மன்மோகன் சிங். பல்கலைக் கழக உணவு விடுதியில் மானிய விலையில் (2 ஷில்லிங்) கிடைக்கும் உணவை மட்டுமே அவர் எடுத்துக்கொண்டுள்ளார். அவர் ஒருபோதும் வெளியே சென்று சாப்பிட்டதே இல்லை. எப்போதாவது பீர் அல்லது ஒயின் அருந்துவார்.
இவ்வாறு கடும் பொருளாதார சிக்கல்களுக்கிடையே படித்த மன்மோகன் சிங், 1957ஆம் ஆண்டு அப்பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறும்போது முதல் வகுப்பில் பட்டம் பெற்று தேர்ச்சி அடைந்தார்.
மன்மோகன் சிங்கின் மகளான தமான் சிங் எழுதிய 'ஸ்ட்ரிக்ட்லி பர்சனல்: மன்மோகன் மற்றும் குர்ஷரன்' என்ற புத்தகத்தில் அவர் இந்தத் தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். ஹேப்பர் கோலின்ஸ் பதிப்பகம் 2014ஆம் ஆண்டில் இப்புத்தகத்தை வெளியிட்டது.
மன்மோகன் சிங், கிழக்கு பஞ்சாபின் கஹா பகுதியில் 1932 ஆம் ஆண்டு பிறந்தார். தற்போதைய பாகிஸ்தானின் சக்வால் மாவட்டத்தில் கஹா கிராமம் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் தனது குழந்தைப் பருவத்தில் எதிர்கொண்ட கடினமான சூழல்கள் குறித்து அடிக்கடி பகிர்ந்துள்ளதாக அவரின் மகள் இப்புத்தகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீண்டும் கிராமத்துக்கு திரும்பச் செல்ல விருப்பம் உள்ளதா? என தனது தந்தையிடம், மகள் தமான் ஒருமுறை கேட்டுள்ளார். அதற்கு மிகவும் தாழ்ந்த குரலில் பதிலளித்த மன்மோகன் சிங், 'மாட்டேன், அங்குதான் என் தாத்தா கொல்லப்பட்டார்' என பதில் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.