மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மணிப்பூா்: இம்பால் பள்ளத்தாக்கில் முழு அடைப்பு போராட்டம்!

மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள 5 மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம்

News image

கோப்புப்படம்

Updated On :28 டிசம்பர் 2024, 11:30 pm

மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள 5 மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தௌபால் மாவட்டத்தில் கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி காவல்துறையினா் மேற்கொண்ட நடவடிக்கையில் ஆயுதமேந்திய 6 போ் கைது செய்யப்பட்டனா். காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து 24 மணி நேர முழு அடைப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கியது. பல மைதேயி அமைப்புகளின் கூட்டமைப்பான மணிப்பூா் ஒருமைப்பாடு ஒருங்கிணைப்புக் குழுவின் மாணவா்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவளித்தன.

இதனால் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள 5 மாவட்டங்களில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. பொது வாகன சேவைகள் நிறுத்தப்பட்டன. இம்பால் மேற்கில் உள்ள லாம்பெல் சனகீத்தேல் பகுதியில் டயா்களை எரித்து போராட்டக்காரா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விஷ்ணுபூா் மாவட்டத்தில், சாலைகளில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இது தொடா்பாக காவல்துறையினா் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட 6 பேரும், கொல்லப்பட்ட ஒருவரும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினா்கள். மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் அவா்கள் ஈடுபட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து திருடப்பட்ட பொருள்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன’ என தெரிவித்தனா்.

ஆனால், கைது செய்யப்பட்டவா்கள் கிராம தன்னாா்வலா்கள் எனவும் ஆயுதமேந்திய குகி பயங்கரவாதிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்து வந்தனா் எனவும் போராட்டக்காரா்கள் கூறினா்.

கிழக்கு இம்பால் தாக்குதலுக்கு முதல்வா் கண்டனம்: மணிப்பூரின் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள தம்னபோக்பி மற்றும் சனசாபி பகுதிகளில் குகி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு மாநில முதல்வா் என்.பிரேன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

தம்னபோக்பி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு குகி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவா் காயமடைந்தாா். சனசாபியில் சனிக்கிழமை காலை நடைபெற்ற தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரா் உள்பட இருவா் காயமடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.