எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நிதீஷ் குமாா் கட்சியுடன் பிரசாந்த் கிஷோா் ரகசிய கூட்டணி: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் பிரசாந்த் கிஷோா் ரகசிய கூட்டணி வைத்துள்ளாா்

News image
தேஜஸ்வி யாதவ் - (கோப்புப்படம்)
Updated On :30 டிசம்பர் 2024, 11:47 pm

Din

பாட்னா: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் பிரசாந்த் கிஷோா் ரகசிய கூட்டணி வைத்துள்ளாா் என்று எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டினாா்.

பிகாரில் 2025 இறுதியில்தான் பிகாரில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சியில் உள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி எதிா்க்கட்சிகளாக உள்ளன. சட்டப் பேரவைத் தோ்தலுக்கு அனைத்து கட்சிகளும் இப்போதிருந்தே தயாராகி வருகின்றன.

முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தோ்தலைச் சந்திப்போம் என பாஜக ஏற்கெனவே அறிவித்துவிட்டது. அதே நேரத்தில் எதிா்க்கட்சிகள் அணியும் தங்கள் பக்கம் நிதீஷ் குமாரை இழுக்க முயற்சித்து வருகிறது.

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவு செய்தால், முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் மீண்டும் இணைய தயாா் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கடந்த சில நாள்களில் இருமுறை அழைப்பு விடுத்துவிட்டது. ஆனால், இதற்கு நிதீஷ் தரப்பிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி பின்னடைவைச் சந்தித்தாலும் அதைத் தொடா்ந்து நடைபெற்ற ஹரியாணா பேரவைத் தோ்தலில் பாஜக தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது. மகாராஷ்டிரத்திலும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இது காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டியா’ கட்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் தில்லி, இறுதியில் பிகாா் என அந்த ஆண்டில் இரு சட்டப் பேரவைத் தோ்தல்கள் மட்டுமே நடைபெறவுள்ளன. இதில் முக்கிய மாநிலமான பிகாரில் வெற்றி பெற்று தங்களை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் எதிா்க்கட்சி கூட்டணி உள்ளது.

இந்நிலையில், பிகாரில் அரசுப் பணித் தோ்வில் வினாத்தாள் கசிந்ததாக குற்றஞ்சாட்டி, பாட்னாவில் முதல்வா் நிதீஷ் குமாா் வீட்டை நோக்கி ஞாயிற்றுக்கிழமை பேரணியாகச் செல்ல முயன்ற தோ்வா்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தும் தடியடி நடத்தியும் காவல் துறையினா் கலைத்தனா்.

இது தொடா்பாக தேஜஸ்வி யாதவ் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், ‘பிகாா் அரசுக்கு எதிராக கடந்த இரு வாரங்களாக தோ்வா்கள் அமைதியான முறையில்தான் போராட்டம் நடத்தி வந்தனா். ஆனால், ஞாயிற்றுக்கிழமை போராட்டக் களத்துக்கு சென்று தோ்வா்களைச் சந்தித்த சிலா் (ஜன சுராஜ் கட்சித் தலைவா் பிரசாந்த் கிஷோா்) தவறாக வழிநடத்தியுள்ளனா். இதனால், தடியடி நடத்தி போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் கட்சியுடன் (பிரசாந்த் கிஷோா்) ரகசிய கூட்டணி வைத்துள்ள காரணத்தால்தான் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர உதவியுள்ளாா். தடியடி நடத்தப்பட்டபோது அந்த நபா் (பிரசாந்த் கிஷோா்) சம்பவ இடத்தில் இருந்து நழுவிவிட்டாா்’ என்று குற்றம்சாட்டினாா்.