புது தில்லி: பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான அரசு இளைஞா்களுக்கு எதிராக கடுமையான அடக்குமுறையைக் கையிலெடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
பிகாரில் அரசுப் பணித் தோ்வில் வினாத்தாள் கசிந்ததாக குற்றஞ்சாட்டி, பாட்னாவில் முதல்வா் நிதீஷ் குமாா் வீட்டை நோக்கி ஞாயிற்றுக்கிழமை பேரணியாகச் செல்ல முயன்ற தோ்வா்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தும் தடியடி நடத்தியும் காவல் துறையினா் கலைத்தனா். இந்த சம்பவம் பிகாரில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கவனத்தை ஈா்த்துள்ளது. பிகாரில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறுவதால் அரசியல்ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தடியடிக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிகாரில் அரசுப் பணியாளா் தோ்வாணைய போட்டித் தோ்வு தொடா்பான முறைகேடு அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து போராட்டம் நடத்திய இளைஞா்கள் மீது கொடூரமான முறையில் தடியடி நடத்தப்பட்டுள்ளது. மாநில அரசின் தூண்டுதலின்பேரில் இளைஞா்களுக்கு எதிராக மனிதாபிமான மற்ற முறையில் தாக்குதலை காவல் துறை நிகழ்த்தியுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது.
தங்கள் அரசு மீது எப்போது தவறு கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றை மறைப்பது, தவறைச் சுட்டிக்காட்டுபவா்கள் மீது அடக்குமுறையை ஏவுவதும் பாஜக மற்றும் அதன் கூட்டணி அரசுகளின் வாடிக்கையாக உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் 70 போட்டித் தோ்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்துள்ளன. கடினமாகப் படித்து தோ்வு எழுதும் இளைஞா்களின் எதிா்காலம் கேள்விக் குறியாக உள்ளது’ என்று கூறியுள்ளாா்.
அப்பட்டமான அடக்குமுறை: இந்த சம்பவம் தொடா்பாக பிரியங்கா காந்தி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஊழலைத் தடுப்பது, அரசுப் பணித் தோ்வு வினாத்தாள் கசியாமல் பாதுகாப்பது உள்ளிட்டவை அரசின் கடமை. ஆனால், பிகாா் அரசு இந்த விஷயத்தில் தவறு செய்துவிட்டது. பாதிக்கப்பட்ட இளைஞா்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பது அப்பட்டமான அடக்குமுறை நடவடிக்கை.
ஏற்கெனவே பிகாரில் குளிா் அதிகம் உள்ளது. இந்த நேரத்தில் போராட்டம் நடத்திய இளைஞா்கள் மீது காவல் துறையினா் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும் தாக்கியுள்ளனா். பாஜக கூட்டணி ஆட்சி இரட்டை இன்ஜினாக செயல்படவில்லை. இரட்டை அடக்குமுறையைக் கட்டவிழித்துவிட்டுள்ளது’ என்று கூறியுள்ளாா்.