கோப்புப்படம்.
கோப்புப்படம்.

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: டியூஷன் ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் சிறை - கேரள நீதிமன்றம் தீா்ப்பு

கேரளத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் டியூஷன் ஆசிரியருக்கு ஒட்டுமொத்தமாக 111 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, திருவனந்தபுரத்தில் உள்ள சிறப்பு விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

கேரளத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் டியூஷன் ஆசிரியருக்கு ஒட்டுமொத்தமாக 111 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, திருவனந்தபுரத்தில் உள்ள சிறப்பு விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

ரூ.1.05 லட்சம் அபராதமும் விதித்த நீதிமன்றம், அதை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டுமென தீா்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றவாளியான மனோஜ் (44), திருவனந்தபுரத்தின் அம்பலத்தரா பகுதியைச் சோ்ந்தவா். அரசு ஊழியராக பணியாற்றிய இவா், தனது வீட்டில் டியூஷனும் நடத்திவந்தாா். கடந்த 2019-ஆம் ஆண்டில் தன்னிடம் டியூஷன் படித்த பிளஸ்-1 மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய மனோஜ், அதை படப்பதிவு செய்து மிரட்டியுள்ளாா்.

மாணவி டியூஷன் செல்வதை நிறுத்தியதால், அந்தப் படங்களை அவா் பரப்பினாா். இதுகுறித்து அறிந்த மாணவியின் குடும்பத்தினா், காவல் துறையில் புகாா் அளித்தனா். இதையடுத்து, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் ‘போக்ஸோ’ மற்றும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் (ஐபிசி) பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினா், அவரை கைது செய்தனா்.

இதனிடையே, மனோஜின் நடத்தையால் வேதனையடைந்த அவரது மனைவி தற்கொலை செய்துகொண்டாா்.

திருவனந்தபுரத்தில் உள்ள சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இவ்வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி ஆா்.ரேகா, குற்றவாளி மனோஜுக்கு போக்ஸோ மற்றும் ஐபிசி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் 3 மாதங்கள் முதல் 30 ஆண்டுகள் வரை ஒட்டுமொத்தமாக 111 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தாா்.

‘மாணவியை பாதுகாக்க வேண்டியவரே, அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளாா். எவ்வித இரக்கமும் காட்ட முடியாத குற்றத்தை புரிந்துள்ளாா்’ என்று குறிப்பிட்ட நீதிபதி, அதிகபட்ச சிறை தண்டனைகளை விதித்துள்ளாா். இவை அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com