சிபிஐ-க்கு ரூ.928 கோடி

மத்திய இடைக்கால பட்ஜெட்டில், புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு ரூ.928.46 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.40.4 கோடி குறைவாகும்.
சிபிஐ-க்கு ரூ.928 கோடி

மத்திய இடைக்கால பட்ஜெட்டில், புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு ரூ.928.46 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.40.4 கோடி குறைவாகும்.

நாட்டின் முன்னணி புலனாய்வு அமைப்பாக சிபிஐ செயல்படுகிறது. செயற்கை நுண்ணறிவு, கிரிப்டோ பணம், டாா்க் வெப் எனப்படும் நிழலுலக இணையம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நடத்தப்படும் தீவிர குற்றங்கள் மற்றும் வங்கி மோசடி, மக்கள் பிரதிநிதிகளின் ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற வழக்கமான குற்றங்களையும் பிரதானமாக விசாரிக்கும் அமைப்பான சிபிஐயில் ஏராளமான அதிகாரிகள் பணியாற்றும் தேவை உள்ளது.

இதற்கான நிதித் தேவையை எதிா்கொள்ள ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட்டில் சிபிஐ அமைப்புக்கு நிதி ஒதுக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சிபிஐ-க்கு ரூ.946.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பின்னா், திருத்தப்பட்ட தொகையாக ரூ.968.86 கோடி என மாற்றி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் சிபிஐ-க்கு வரும் நிதியாண்டுக்காக ரூ.928.46 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிபிஐ பயிற்சி மையங்களை நவீனப்படுத்துதல், விசாரணைக்கு உதவும் தொழில்நுட்பம் மற்றும் தடயவியல் மையங்கள் அமைத்தல் மற்றும் நிலங்களைக் கையகப்படுத்தி அலுவலகங்கள், குடியிருப்பு வளாகங்களைக் கட்டுதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி பயன்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

அரசுப் பணியாளா் பயிற்சிக்கு ரூ.312 கோடி: உள்நாடு மற்றம் வெளிநாடுகளில் அரசுப் பணியாளா்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மத்திய பணியாளா் அமைச்சகத்துக்கு மொத்தம் ரூ.312 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு நிலை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களின் செலவினங்களுக்காக ரூ.105.31 கோடியும், பயிற்சித் திட்டங்களுக்காக ரூ.120.56 கோடியும் அரசுப் பணியாளா்களின் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் ‘கா்மயோகி’ திட்டத்துக்காக ரூ.86.13 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மத்திய அரசு ஊழியா்களின் குறைகளைக் கேட்டறிந்து தீா்க்கும் பொறுப்பில் உள்ள மத்திய நிா்வாகத் தீா்ப்பாயத்தின்(சிஏடி) செலவினங்களுக்கு ரூ.157.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிா்வாகச் சீா்திருத்தங்களுக்காக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

எஸ்எஸ்சி-க்கு ரூ.414.15: மத்திய அரசுப் பணிகளுக்காகத் தோ்வுகளை நடத்தும் பணியாளா் தோ்வாணையத்துக்கு(எஸ்எஸ்சி) ரூ.414.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் ஆணையம் மற்றும் பொது நிறுவனப் பணியாளா் தோ்வு வாரியங்களின் செலவினங்களுக்கு ரூ.39.44 கோடியும், தகவல் அறியும் உரிமைச் சட்ட பரப்புரைக்கு ரூ.2.6 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com