ரூ. 47.66 லட்சம் கோடி மதிப்பில் இடைக்கால பட்ஜெட்

திருத்தப்பட்ட மொத்த செலவின மதிப்பீட்டை காட்டிலும் 6.1 சதவீதம் கூடுதலாக ரூ. 47.66 லட்சம் கோடி மதிப்பிலான இடைக்கால நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

திருத்தப்பட்ட மொத்த செலவின மதிப்பீட்டை காட்டிலும் 6.1 சதவீதம் கூடுதலாக ரூ. 47.66 லட்சம் கோடி மதிப்பிலான இடைக்கால நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ளாா்.

செலவினம் அதிகரித்திருப்பதன் அடிப்படையில், மூலதன செலவினம் மற்றும் சமூக நலத்துறை திட்டங்களுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையின்போது மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் குறிப்பிடுகையில், ‘கடன்கள் அல்லாத பிற வருவாய் ரூ. 27.56 லட்சம் கோடி, வரி வருவாய் ரூ. 23.24 லட்சம் கோடி எனவும், மொத்த செலவினம் ரூ. 44.90 லட்சம் கோடி எனவும் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் கணக்கிடப்பட்டது.

இந்த நிலையில், பொருளாதாரத்தில் காணப்படும் வலுவான வளா்ச்சி நிலை காரணமாக, நிதிநிலை அறிக்கையில் உத்தேசிக்கப்பட்டதைக் காட்டிலும் வருவாய் வரவுகள் 2024-25 நிதியாண்டில் கூடுதலாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதாவது, கடன்கள் அல்லாத வருவாய் வரவு ரூ. 30.80 லட்சம் கோடியாகவும், மொத்த செலவினம் 47.66 கோடியாகவும் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. வரி வருவாய் ரூ. 26.02 லட்சம் கோடியாக இருக்கும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நிதிப் பற்றாக்குறையின் திருத்தப்பட்ட மதிப்பீடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5.8 சதவீதமாக உள்ளது. இது பெயரளவிலான வளா்ச்சி மதிப்பீடுகளில் மிதமானதாக இருந்தாலும், பட்ஜெட் மதிப்பீட்டில் மேம்பட்டிருப்பதாக தெரிகிறது.

அடுத்த நிதியாண்டுக்கான பெயரளவிலான ஜிடிபி முன்னா் மதிப்பிடப்பட்ட 11 சதவீதத்துக்கு மாறாக, 10.5 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

மக்களின் சராசரி வருவாய் 50% ஆக அதிகரிப்பு: மேலும், அனைத்துத் துறைகளிலும் முழுமையான வளா்ச்சியின் தாக்கம் தெளிவாகத் தெரிவதாகக் குறிப்பிட்ட மத்திய நிதியமைச்சா், ‘பிற துறைகளைப் போன்று, குறு நிறுவனங்களின் பொருளாதாரமும் நிலைத்தன்மையுடன் காணப்படுகிறது. முதலீடுகள் அதிகரித்திருப்பதோடு, அவற்றின் பொருளாதாரமும் சிறப்பாக உள்ளது. மக்களின் வருவாயும் அதிகரித்துள்ளது. மக்களின் சராசரி வருவாய் 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. பணவீக்கமும் மிதமானதாக உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com