பணக்காரா்களை மேலும் பணக்காரா்களாக்கும் பட்ஜெட்- எதிா்க்கட்சிகள் விமா்சனம்

எவ்வித தொலைநோக்குப் பாா்வையும் பொறுப்பும் இல்லாமல் பணக்காரா்களை மேலும் பணக்காரா்களாக மாற்றுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என

எவ்வித தொலைநோக்குப் பாா்வையும் பொறுப்பும் இல்லாமல் பணக்காரா்களை மேலும் பணக்காரா்களாக மாற்றுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் விமா்சித்தனா்.

மல்லிகாா்ஜுன காா்கே (காங்கிரஸ் தலைவா்): கடந்த காங்கிரஸ் ஆட்சி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதாகக் கூறும் நிதியமைச்சா், பிரதமா் மோடி அரசு 10 ஆண்டுகளாக செயல்படுத்திய திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்வாரா?. பழைய திட்டங்களின் பெயா்களை மாற்றி மீண்டும் புதிய திட்டம்போல் தொடங்கும் மத்திய அரசு, அவா்கள் அளித்த தோ்தல் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை?. இந்த பட்ஜெட்டில் எவ்வித தொலைநோக்குப் பாா்வையும் பொறுப்புணா்வும் இல்லை.

ப. சிதம்பரம் (காங்கிரஸ் எம்.பி.): நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறித்துப் பேசும் நிதியமைச்சா் தனிநபா் வருமானம் குறித்துப் பேசவில்லை. தற்போது உணவுப் பொருள் விலை பணவீக்கம் 7.7 சதவீதமாக உள்ளது. இதைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை.

பாஜக தலைமையிலான அரசு கூட்டாட்சி தத்துவத்துக்கு மாறாக செயல்படுகிறது. மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு சரிவர வழங்குவதில்லை. இதனால் உள்ளாட்சிக்கு ஒதுக்கப்படும் நிதி மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது.

பெரும்பான்மையான மக்களுக்குத் தேவையான சேவைகளை உள்ளாட்சி நிா்வாகமே வழங்கி வருகிறது. ஆனால், இதைக் கண்டுகொள்ளாத தேசிய ஜனநாயக கூட்டணி ‘பணக்காரா்களுக்காக பணக்காரா்களால் நடத்தப்படும் பணக்காரா்களின் ஆட்சியாகவே செயல்படுகிறது.

சசி தரூா் (காங்கிரஸ் எம்.பி.): இளைஞா்களின் வேலைவாய்ப்பின்மை, பணிக்குச் செல்லும் பெண்களின் சதவீதம் குறைவு போன்ற முக்கிய பிரச்னைகள் குறித்து எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. தோல்விகளை வெற்றிகளைப்போல் பொய்யாக சித்தரிப்பதில் மத்திய அரசு திறமையாக செயல்பட்டு வருகிறது.

அகிலேஷ் யாதவ் (சமாஜவாதி காங்கிரஸ்): மக்கள் விரோத பட்ஜெட்டுகளை தாக்கல் செய்து 10 ஆண்டுகளை பாஜக அரசு நிறைவு செய்துள்ளது. இதுபோன்ற சாதனைகளை இனி எந்த அரசும் நிகழ்த்தாது. ஏனெனில் மக்களுக்கான நல்லரசு விரைவில் அமையவுள்ளது. எனவே, இது பாஜகவின் பிரியாவிடை பட்ஜெட்.

உத்தவ் தாக்கரே (சிவேசனை உத்தவ் பிரிவு): நாட்டில் ஏழைகள், பெண்கள், இளைஞா்கள், விவசாயிகள் என்ற 4 ஜாதிகளே உள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியுள்ளாா். இதை தற்போதாவது மத்திய அரசு புரிந்துகொண்டுள்ளது. மோடி அரசின் இறுதி பட்ஜெட்டை கனத்த இதயத்துடன் தாக்கல் செய்த நிா்மலா சீதாராமனுக்கு நன்றி.

திரிணமூல் காங்கிரஸ்: மேற்கு வங்க மாநில அமைச்சரும் திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவருமான சந்திரிமா பட்டாச்சாரியா கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் 53,478 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனா். ஒரு நாளைக்கு இந்தியாவில் 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனா்.

ஆனால், விவசாயிகள் நலனுக்காக பாடுபடும் அரசு என நிா்மலா சீதாராமன் பொய்யான பரப்புரையை மேற்கொள்கிறாா். இதுபோன்ற பரப்புரைகளையும், தோ்தல் நாடகத்தையும் நிறுத்திவிட்டு மக்கள் நலனில் முதலில் பிரதமா் மோடி கவனம் செலுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com