400 தொகுதிகளுக்கு மேல் பாஜக கூட்டணி வெல்லும்: மோடி

நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
400 தொகுதிகளுக்கு மேல் பாஜக கூட்டணி வெல்லும்: மோடி

மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று (பிப்.5) உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 

மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் 370 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டு வெற்றி பெறும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். 

காங்கிரஸுக்கு இறுதிக்காலம் நெருங்கிவிட்டது. பாஜக மீண்டும் ஆட்சியமைத்து 1,000 ஆண்டுகளுக்கான திட்டங்களுக்கு அடித்தளம் அமைக்கும். 

ஏழைகளுக்கு தேவையான வாய்ப்புகள், தொழிலுக்கான வழிவகையை செய்துகொடுத்தாலே நாட்டில் ஏழ்மை ஒழிந்துவிடும். சாலையோர வியாபாரிகள், கைவினைக் கலைஞர்களுக்கு சிறப்புத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

காங்கிரஸ் கட்சி ஒரே குடும்பத்தை மட்டுமே நம்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மந்தகரமான வேகத்துடன் நாங்கள் எப்போதும் போட்டியிடுவதில்லை. 

பாஜக ஆட்சியில் 17 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு 4.8 கோடி வீடுகள்  கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. நாங்கள் பேசுவது எங்கள் சாதனையைப் பற்றி அல்ல; நாட்டின் வளர்ச்சி மற்றும் பெருமைகளைப் பற்றி. பாஜக அரசு பெரிய குறிக்கோளுடன் கடுமையாக உழைத்து வருகிறது. 

அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. குடும்பங்களிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. பாஜக அரசு ஆட்சி அமைத்த பிறகு 3 கோடி பெண்கள் பொருளாதார ரீதியாக உயர்ந்துள்ளனர்.

தேசிய ஆலோசனைக் குழுவில் காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை பேர் ஓபிசி பிரிவில் இடம்பெற்றிருந்தனர் எனக் கேள்வி எழுப்பினார். 

கூட்டணிகளுக்கே காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லை

தொடர்ந்து பேசிய மோடி, காங்கிரஸ் கட்சிக்கு இறுதிக்காலம் நெருங்கிவிட்டதாகவும், கூட்டணி கட்சிகளுக்கே காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லை  விமர்சித்தார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் அரசியலுக்கு வரலாம்; ஒரே குடும்பம் ஆட்சி நடத்துவதுதான் குடும்ப அரசியல். ஒருசிலரின் முகத்தை முன்னிலைப்படுத்த மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறது காங்கிரஸ். ஒருசிலரின் முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக இளைஞர்களுக்கு அரசியலில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

எதிர்க்கட்சி கூட்டணியில் ஒருவர்மீது ஒருவருக்கே நம்பிக்கையில்லை. கூட்டணி கட்சிகளுக்கே காங்கிரஸ் தலைமையின் மீது நம்பிக்கையில்லை. 
மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வியூகம்  சிதறிவிட்டது. காங்கிரஸ் கட்சி தனது இறுதிக்கட்டத்தில் உள்ளது என பிரதமர் மோடி விமர்சித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com