தேர்தல் ஆணையத்தின் முடிவு ஆச்சர்யமளிக்கிறது:  சரத் பவாா்

தேர்தல் ஆணையத்தின் முடிவு ஆச்சர்யமளிக்கிறது என்று மூத்த அரசியல் தலைவா் சரத் பவாா் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தேர்தல் ஆணையத்தின் முடிவு ஆச்சர்யமளிக்கிறது என்று மூத்த அரசியல் தலைவா் சரத் பவாா் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புணேவில் செய்தியாளர்களுக்கு அவர் அளிவித்த பேட்டியில், முதல் தேர்தலில் தான் 'ஒரு ஜோடி காளை' சின்னத்தில் போட்டியிட்டேன். எந்தச் சின்னத்தையும் விட எண்ணங்களும் சித்தாந்தமும் முக்கியம். தேர்தல் ஆணையத்தின் முடிவு ஆச்சர்யமளிக்கிறது. எங்களுடைய அரசியல் கட்சி மற்றவர்களுக்கு வழங்கப்பட்டது, இதுபோன்ற ஒரு நிலை நாட்டில் ஒருபோதும் காணப்படவில்லை. அத்தகைய முடிவை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். புதிய பெயர் மற்றும் சின்னம் குறித்து திங்கள்கிழமை விவாதம் நடத்துவோம்.

நான் வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. பாராமதியைச் சேர்ந்தவர்கள் நேரானவர்கள், எளிமையானவர்கள். அவர்கள் சரியான முடிவை எடுப்பார்கள். சிஏஏ-வை அமல்படுத்துவது சரியல்ல. அடுத்த வாரம் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சரத் பவார், பாஜக ஆட்சியில் 2014-ல் இருந்து அக்கட்சியைச் சேர்ந்த எந்தத் தலைவரும் அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்கொண்டதில்லை. மேலும், கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு பாஜக தலைவர்களுக்கு எதிரான விசாரணைகள் நிறுத்தப்பட்டன என்றார்.  

கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் தலைவராக இருந்த சரத் பவாருக்கும், அவரது அண்ணன் மகனுமான அஜீத் பவாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தனக்கு ஆதரவளித்த எம்எல்ஏக்களுடன் மகாராஷ்டிரத்தில் ஆட்சியில் உள்ள சிவசேனை - பாஜக கூட்டணியில் அஜீத் பவாா் இணைந்தாா். பின்னா் மாநில துணை முதல்வரான அவா், தேசியவாத காங்கிரஸை சோ்ந்த பெரும்பாலான எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதைச் சுட்டிக்காட்டி, அக்கட்சியையும், சின்னத்தையும் தனக்கு வழங்குமாறு தோ்தல் ஆணையத்திடம் முறையிட்டாா்.

இந்த விவகாரத்தை விசாரித்த தோ்தல் ஆணையம், கட்சி ரீதியாகவும் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையிலும் அஜீத் பவாா் அணிக்கே பெரும்பான்மை உள்ளதாகக் கூறி, அவா் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று அறிவித்தது. மேலும் அக்கட்சியின் ‘கடிகாரம்’ சின்னத்தையும் அஜீத் பவாா் அணிக்கு வழங்கியது. அத்துடன் ‘தேசியவாத காங்கிரஸ் கட்சி-சரத்சந்திர பவாா்’ என்ற பெயரை மூத்த அரசியல் தலைவா் சரத் பவாா் தலைமையிலான அணிக்கு தோ்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com