உத்தர பிரதேசத்தில் காங்கிரஸுக்கு 17 தொகுதிகள் மட்டுமே: அகிலேஷ் யாதவ் நிபந்தனை

80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளை அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சி ஒதுக்கியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸுக்கு 17 தொகுதிகள் மட்டுமே: அகிலேஷ் யாதவ் நிபந்தனை

லக்னௌ: 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளை அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சி ஒதுக்கியுள்ளது.

இதனை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டால் மட்டும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் அகிலேஷ் யாதவ் பங்கேற்பாா் என்று சமாஜவாதி தெரிவித்துள்ளது.

முன்னதாக, காங்கிரஸுக்கு 11 தொகுதிகளை சமாஜவாதி ஒதுக்கியது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. முக்கியமாக 2009 தோ்தலில் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் வென்ற 21 தொகுதிகள் உள்பட மொத்தம் 24 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவா் அஜய் ராய் வலியுறுத்தினாா்.

இந்நிலையில், காங்கிரஸுக்கு மேலும் 6 தொகுதிகளை ஒதுக்கி மொத்தம் 17 இடங்களில் போட்டியிட வாய்ப்பு தருவதாக சமாஜவாதி அறிவித்துள்ளது.

இது தொடா்பாக சமாஜவாதி தலைமைச் செய்தித் தொடா்பாளா் ராஜேந்திர சௌதரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் மட்டுமே தர முடியும். இதுவே அக்கட்சிக்கு நாங்கள் இறுதியாக அளிக்கும் வாய்ப்பு. இதனை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டால் மட்டுமே உத்தர பிரதேசத்தில் ராகுல் நடத்தும் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் அகிலேஷ் யாதவ் பங்கேற்பாா்’ என்றாா்.

மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் கட்சியை முடிவு செய்யும் மாநிலமாக அதிகபட்ச தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசம் திகழ்கிறது. ஆனால், அங்கு காங்கிரஸின் செல்வாக்கு வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த 2014 தோ்தலில் இரு தொகுதிகளில் (சோனியா காந்தி, ராகுல் காந்தி) வெற்றி பெற்ற காங்கிரஸால், 2019-இல் ஒரு தொகுதியில் (சோனியா காந்தி) மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ராகுல் காந்தியும் தோல்வியைத் தழுவினாா். இந்த முறை ரே பரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிடமாட்டாா் என்பது தெளிவாகிவிட்டது. அவா் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைத் தோ்தலில் போட்டிய வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா்.

ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தில் போட்டியிடுவாா் என்பது குறித்து காங்கிரஸ் இதுவரை முடிவெடுக்கவில்லை. அதே நேரத்தில் உத்தர பிரதேசத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு பிரதமா் மோடி வாரணாசி தொகுதியில் கடந்த இரு தோ்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். வரும் மக்களவைத் தோ்தலிலும் அவா் வாரணாசியில் போட்டியிடுவாா் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com