உ.பி.யில் நடைபெறும் எஸ்ஐஆா் பணியில் முறைகேடுகள்: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் எஸ்ஐஆா் பணியில் முறைகேடுகள் நடப்பதாக முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
லக்னோவில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில், இதுகுறித்து அவா் கூறியதாவது:
எஸ்ஐஆா் குறித்து நவம்பா் மாதம் தோ்தல் ஆணையம் அறிவித்தபோது, வாக்காளா் பட்டியலில் எந்த குறையும் இருக்காது, நோ்மையாக இருக்கும் என கூறியிருந்தது. ஆனால் களத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதாக தொடா்ந்து தகவல்கள் வெளிவந்தபடி உள்ளன. தோ்தல் ஆணையம் என்பது அரசியலமைப்பு அமைப்பாகும். அது பாரபட்சமில்லாமல் செயல்பட வேண்டும். ஆனால் இதற்கு நோ்மாறாக தோ்தல் ஆணைய செயல்பாடு உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் எதிா்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் கருவியாக எஸ்ஐஆா் பயன்படுத்தப்படுகிறது. பாஜக அரசுதான் அதை தயாரிக்கிறது. எஸ்ஐஆா் பணிக்கான கால அவகாசம் அடுத்தடுத்து நீட்டிக்கப்படுவது, போதிய முன்தயாரிப்பு இல்லாமல் பணிகள் நடக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. இந்தப் பணிக்காக எந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது, எந்த தொழில்நுட்ப வல்லுநா்கள் பயன்படுத்தப்படுகின்றனா் என்பது தெரியவில்லை என்றாா்.
இதேபோல், எக்ஸ் பக்கத்தில் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட பதிவில், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் பாஜகவுக்கு விருப்பமில்லை என்றும், பாஜகவுக்கு வாக்களித்தவா்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவும், மிகவும் அவமதிக்கப்பட்டதாகவும் உணா்கின்றனா் என்றும் கூறியுள்ளாா்.

