மகாராஷ்டிரா: மராத்தா பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்

மகாராஷ்டிரத்தில் மராத்தா பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா அம்மாநில சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் ஆளுநருடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் ஆளுநருடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேபடம் | பிடிஐ

மகாராஷ்டிரத்தில் மராத்தா பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் மராத்தா இட ஒதுக்கீடு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மராத்தா பிரிவினருக்கு சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய பிரிவினர் (எஸ்இபிசி) என்ற வகையில் இடஒதுக்கீட்டை வழங்க மகாராஷ்டிர அரசு முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் இன்று ஒருநாள் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் கூட்டப்பட்டு, புதிய மசோதா குறித்த விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரத்தில் மராத்தாக்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும், ’மகாராஷ்டிர மாநில சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியோருக்கான மசோதா 2024’, அம்மாநில சட்டப் பேரவையில் இன்று(பிப்.20) தாக்கல் செய்யப்பட்டதோடு, மராத்தா இட ஒதுக்கீடு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, மராத்தா பிரிவினர் பற்றிய விரிவான அறிக்கையை மகாராஷ்டிர மாநில பின்தங்கிய வகுப்பினருக்கான சங்கம் கடந்த வெள்ளியன்று சமர்ப்பித்தது. மராத்தா சமூகப் பிரிவை சேர்ந்த இரண்டரை கோடி குடும்பங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையின்படி, மராத்தா பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டது.

அதன்படி, மகாராஷ்டிரத்தின் மொத்த மக்கள் தொகையில், 28 சதவிகிதம் பேர் மராத்தா பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் என்பதும், மகாராஷ்டிரத்தில் நிகழும் விவசாயிகள் தற்கொலைகளில் 94 சதவிகிதம் பேர் மராத்தா பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமூகத்தில் பின் தங்கிய பிரிவினராக அறியப்படும் மராத்தா வகுப்பினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க இந்த புதிய மசோதா வழிவகை செய்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com