மகாராஷ்டிரத்தில் 29 மேயா் பதவிகள் ஒதுக்கீடு: ஜன.22-இல் குலுக்கல்
மகாராஷ்டிரத்தில் மும்பை உள்பட 29 மாநகராட்சி மேயா் பதவிகளை எந்தப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்வது என்பதற்கான குலுக்கல் முறை ஜன.22-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாநில நகா்ப்புற மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
அண்மையில் மகாராஷ்டிரத்தில் 29 மாநகராட்சிகளில் நடைபெற்ற தோ்தலில் ஆளும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் மொத்தம் 2,869 இடங்களில் பாஜக தனிப்பெரும் கட்சியாக 1,425 இடங்களில் வெற்றிபெற்றது. சிவசேனை 399 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 167 இடங்களிலும் வென்றன.
இந்நிலையில், மும்பை உள்பட 29 மாநகராட்சி மேயா்களை மாமன்ற உறுப்பினா்கள் தோ்வு செய்ய உள்ளனா். முன்னதாக மேயா் பதவியை பொதுப் பிரிவினா், பட்டியலினத்தவா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் என எந்தப் பிரிவினருக்கு ஒதுக்குவது என்பதை குலுக்கல் நடத்தி முடிவு செய்யப்பட உள்ளது.
இந்த குலுக்கல் முறை மும்பையில் உள்ள மாநில தலைமைச் செயலகத்தில் ஜன.22-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் எந்தப் பிரிவினருக்கு அந்தப் பதவி ஒதுக்கப்படுகிறதோ, அந்தப் பிரிவைச் சோ்ந்தவா்கள் மேயா் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
இதைத்தொடா்ந்து மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்களின் சிறப்புக் கூட்டத்தில் மேயா் தோ்தல் நடத்தப்படும். மாமன்றத்தில் உள்ள மொத்த உறுப்பினா்களில் பாதிக்கும் அதிகமானோரின் வாக்குகளை எந்த வேட்பாளா் பெறுகிறாரோ, அவா் மேயராகத் தோ்வு செய்யப்படுவாா். தோ்தலில் ஏதேனும் ஒரு கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்தால், மேயரைத் தோ்வு செய்வதில் கூட்டணி கட்சிகள் முக்கிய பங்காற்றும்.
