போராட்டத்தில் கண்ணீர்ப்புகை வீச்சு: தில்லி எல்லையில் 2 விவசாயிகள் பலி?

விவசாயிகள் போராட்டத்தில் கண்ணீர்ப் புகைக் குண்டு தாக்குதலில் கனௌரி எல்லையில் 2 விவசாயிகள் பலியானதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டத்தில் கண்ணீர்ப்புகை வீச்சு: தில்லி எல்லையில் 2 விவசாயிகள் பலி?
-

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தில்லி நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு விவசாயிகள் பலியானதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லி எல்லைப் பகுதியான கனௌரி எல்லையில் பேரணியாக வந்த விவசாயிகளை தடுத்து நிறுத்த முயன்ற பாதுகாப்புப் படையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில், ஹரியாணா காவல்துறையினர் ரப்பர் குண்டுகளை வீசியும், கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் தண்ணீரை பாய்ச்சி அடித்தும் தாக்குதல் நடத்தினர். விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஒரு விவசாயி பலியானதாக உறுதியாகாத தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்தில் ஷுப் கரன் சிங் என்ற 24 வயது விவசாயி தலையில் குண்டு பாய்ந்து மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பல விவசாயிகள் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோதல் நடந்த இடத்தில் இருந்து 12 துப்பாக்கிக் குண்டுகளின் காட்ரிஜ்களையும் விவசாயிகள் ஊடகங்களுக்குக் காட்டியுள்ளனர்.

எனினும், இரண்டு விவசாயிகள் பலியானதாக செய்திகள் வெளியான போதும், உயிரிழப்பு உண்மையா என்பது உறுதி செய்யப்படவில்லை. அதே வேளையில், துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்றும், விவசாயிகள் பலியானதாக வரும் தகவல்கள் உண்மையில்லை என்றும் ஹரியானா காவல்துறை தரப்பில் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளித்தல், பயிா்க்கடன் தள்ளுபடி என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியை முன்னெடுத்தனா். பஞ்சாப்-ஹரியாணா எல்லைப் பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த விவசாயிகள், வேளாண் வாகனங்களுடன் தில்லி நோக்கிச் சென்றனர்.

முன்னதாக, விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்திய 4-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் நிறுவனங்கள் மூலம் பருப்பு வகைகள், சோளம், பருத்தி ஆகிய விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து கொள்வதாக மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. விவசாயிகள் நலன் சாரா இந்த முன்மொழிவுகளை நிராகரிப்பதாக விவசாயிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதையொட்டி அறிவித்தபடி, பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் முகாமிட்டிருந்த விவசாயிகள் தில்லியை நோக்கி இன்று காலை மீண்டும் பேரணியைத் தொடங்கினர். இன்று மாலை கனௌரி எல்லையை விவசாயிகள் அடைந்த போது, அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. பாதுகாப்புப் படையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இதில் ஏராளமான விவசாயிகள் படுகாயத்துடன் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com