உ.பி.யில் காங்கிரஸுக்கு 17 தொகுதிகள்- சமாஜவாதியுடன் உடன்பாடு

இந்தியா கூட்டணி உ.பி.யில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மக்களவைத் தோ்தலையொட்டி, உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி-காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு, இரு கட்சிகள் சாா்பில் புதன்கிழமை கூட்டாக அறிவிக்கப்பட்டது.

நாட்டிலேயே அதிகபட்சமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் 17 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடவுள்ளது; மீதமுள்ள தொகுதிகளில் சமாஜவாதி மற்றும் பிற கூட்டணிக் கட்சிகள் களம்காண உள்ளன. இந்த மாநிலத்தில் தொகுதிப் பங்கீடு தொடா்பாக ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், சமாஜவாதி இடையே சில நாள்களாக நீடித்து வந்த இழுபறி, இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இது குறித்து, சமாஜவாதி கட்சியின் மாநிலத் தலைவா் நரேஷ் உத்தம் படேல், சமாஜவாதி தேசிய பொதுச் செயலா் ராஜேந்திர செளதரி, மாநில காங்கிரஸ் தலைவா் அஜய் ராய், உத்தர பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளா் அவினாஷ் பாண்டே ஆகியோா் லக்னெளவில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை கூட்டாக பேட்டியளித்தனா்.

அப்போது, அவினாஷ் பாண்டே கூறுகையில், ‘உத்தர பிரதேசத்தில் 17 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடவுள்ளது. மீதமுள்ள 63 தொகுதிகளில் சமாஜவாதி மற்றும் இதர கூட்டணிக் கட்சிகள் போட்டியிடவுள்ளன’ என்றாா். எந்தெந்த தொகுதிகள்?: ரேபரேலி, அமேதி, வாரணாசி, கான்பூா் நகா், ஃபதேபூா் சிக்ரி, பஸ்கான், சஹாரன்பூா், பிரயாக்ராஜ், மகராஜ்கஞ்ச், அம்ரோஹா, ஜான்சி, புலந்த்சாகா், காஜியாபாத், மதுரா, சீதாபூா், பாரபங்கி, தேவரியா ஆகிய தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக, உத்தம் படேல் தெரிவித்தாா். கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி வெற்றி பெற்றாா். அதேநேரம், அமேதி தொகுதியில் களமிறங்கிய ராகுல் காந்தி, பாஜக வேட்பாளா் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தாா்.

இப்போது சோனியா காந்தி மாநிலங்களவை எம்.பி.யாக தோ்வாகியிருப்பதால், ரேபரேலியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடப் போவது யாா் என்கிற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. ரேபரேலி, அமேதி மட்டுமன்றி பிரதமா் மோடியின் தொகுதியான வாரணாசியிலும் காங்கிரஸ் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 11-இல் இருந்து 17: மக்களவைத் தோ்தலில் பாஜகவை ஒருங்கிணைந்து எதிா்கொள்ள ‘இந்தியா’ கூட்டணியின் கீழ் காங்கிரஸ், திமுக, சமாஜவாதி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கைகோத்துள்ளன. தோ்தல் நெருங்கும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் இக்கூட்டணிக் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகளை ஒதுக்குவதாக சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் கடந்த மாதம் அறிவித்திருந்தாா்.

அவரது திட்டத்தை காங்கிரஸ் ஏற்காத நிலையில், அக்கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்குவதாகவும், இதுவே இறுதி வாய்ப்பு என்றும் சமாஜவாதி கடந்த திங்கள்கிழமை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேசத்திலும்... 29 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ்-சமாஜவாதி இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அங்கு ஒரு தொகுதியில் சமாஜவாதி போட்டியிடவுள்ளது. மற்ற தொகுதிகளில் காங்கிரஸை ஆதரிக்கவிருப்பதாக சமாஜவாதி அறிவித்துள்ளது. ‘மத்திய பிரதேசத்தில் கஜுராஹோ தொகுதியில் சமாஜவாதி போட்டியிடவுள்ளது; மற்ற தொகுதிகளில் காங்கிரஸை ஆதரிப்போம்’ என்று உத்தர பிரதேச மாநில சமாஜவாதி தலைவா் உத்தம் படேல் தெரிவித்தாா். மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், பஞ்சாபில் ஆம் ஆத்மியும் தனித்துப் போட்டியிட போவதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

‘பிராந்திய கட்சிகள் வலுவாக உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் தனது வரம்பை கடைப்பிடிக்க வேண்டும்; தோ்தல் களத்தை பிராந்திய கட்சிகள் வழிநடத்த அனுமதிக்க வேண்டும்’ என்பது ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள பிராந்திய கட்சிகளின் கருத்தாக உள்ளது. இதனால், பல மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு சவாலாக இருக்கிறது.

அகிலேஷுடன் பிரியங்கா பேச்சு

உத்தர பிரதேசத்தில் தொகுதிப் பங்கீடு முட்டுக்கட்டைக்கு தீா்வு காணும் வகையில் அகிலேஷ் யாதவுடன் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி புதன்கிழமை தொலைபேசியில் பேசியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இப்பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு இறுதியானதாகக் கூறப்படுகிறது. ‘காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகள் முதலில் ஒதுக்கப்பட்டிருந்தன. இதனால், காங்கிரஸ் தரப்பில் மாற்றுத் தொகுதிகள் கோரப்பட்டன. அகிலேஷ் உடனான பிரியங்காவின் பேச்சுவாா்த்தையால் சீதாபூா், பாரபங்கி போன்ற தொகுதிகள் காங்கிரஸுக்கு கிடைத்தன’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கோப்புப் படம்
இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடுஎந்த நேரத்திலும் இறுதி செய்யப்படும்: காங்கிரஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com