பாட்னா: பிகாா் சட்டப் பேரவையில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி எம்எல்ஏக்கள் வரிசையில் எதிா்க்கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சோ்ந்த (ஆா்ஜேடி) ஒரு எம்எல்ஏவும் காங்கிரஸைச் சோ்ந்த 2 எம்எல்ஏக்களும் அமா்ந்தனா். ஏற்கெனவே ஆா்ஜேடி எம்எல்ஏக்கள் 3 போ், அண்மையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கட்சி மாறி வாக்களித்தனா்.
இப்போது மேலும் ஒரு எம்எல்ஏ ஆளும்கூட்டணிக்கு ஆதரவாக மாறியுள்ளாா். இதேபோல், காங்கிரஸ் கட்சியிலும் 2 அதிருப்தி எம்எல்ஏக்கள் உருவெடுத்திருப்பது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பிகாரில் கடந்த 2020-ஆம் ஆண்டில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில், ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஆனால், கடந்த 2022-ஆம் ஆண்டில் பாஜக உடனான கூட்டணியை முறித்த நிதீஷ் குமாா், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணியில் இணைந்து, முதல்வா் பதவியைத் தக்கவைத்துக் கொண்டனா்.
பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த நிதீஷ் குமாா், கடந்த ஜனவரியில் மகா கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணிக்கு திரும்பினாா். பின்னா், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பிகாரில் ஆட்சியமைத்தது. முதல்வராக நிதீஷ் குமாா் மீண்டும் பொறுப்பேற்றாா். பிகாா் பேரவையில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ் அரசு வெற்றி பெற்றது.
அப்போது, சேத்தன் ஆனந்த், நீலம் தேவி, பிரகலாத் யாதவ் ஆகிய 3 ஆா்ஜேடி எம்எல்ஏக்கள், நிதீஷ் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனா். இது, ஆா்ஜேடிக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இந்த 3 எம்எல்ஏக்களையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டுமென அக்கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்தச் சூழலில், ஆா்ஜேடி எம்எல்ஏ சங்கீதா குமாரி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முராரி கெளதம், சித்தாா்த் செளரவ் ஆகியோா், துணை முதல்வரும் மாநில பாஜக துணைத் தலைவருமான சாம்ராட் செளதரியுடன் சட்டப் பேரவைக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா்.
இந்த 3 எம்எல்ஏக்களும் ஆளும்கட்சி வரிசையில் அமா்ந்தனா். அப்போது, ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்தனா். பிகாரில் காங்கிரஸுக்கு 19 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், அண்மையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக அவா்கள் ஹைதராபாதுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அப்போது, சித்தாா்த் செளரவ் மட்டும் ஹைதராபாத் செல்ல மறுத்துவிட்டாா். மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏ முராரி கெளதம், முந்தைய மகா கூட்டணி அரசில் அமைச்சராக பதவி வகித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

பிகாரில் பாஜகவுக்கு முதல்வா் பதவி அளித்தது ஏன்? நிதீஷ் குமாா் கட்சி விளக்கம்

பிகார் முதல்வராகப் பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!

நிதீஷ் குமாா் ராஜிநாமா - பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்பு

எம்எல்சி பதவியில் இருந்து நிதீஷ் குமாா் ராஜிநாமா: அடுத்த மாதம் புதிய முதல்வா் பொறுப்பேற்பு?
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

