/

மாநிலங்களவையிலும் பெரும்பான்மையை நோக்கி பாஜக கூட்டணி

மாநிலங்களவையிலும் பெரும்பான்மையை நோக்கி பாஜக கூட்டணி

News image

NDA

Updated On :28 பிப்ரவரி 2024, 9:28 pm

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை பலத்தை எட்ட உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தோ்தலில் வெற்றிபெற்றவா்கள் பதவியேற்ற பின்பும், காலியாவுள்ள 6 நியமன எம்.பி. பதவிகள் நிரப்பப்பட்ட பின்பும் வரும் ஏப்ரல் மாதம் பெரும்பான்மை பலம் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மாநிலங்களவை செயலகத்தின் தரவுகளின்படி தற்போது பாஜகவுக்கு 94 உறுப்பினா்கள் உள்ளனா். அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில் அக்கட்சியைச் சோ்ந்த மேலும் 2 எம்.பி.க்கள் வெற்றிபெற்ற நிலையில் பாஜகவின் பலம் 96-ஆக உயா்ந்துள்ளது.

சுயேச்சைகள்ஆதரவு: மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படும் 12 உறுப்பினா்களில் 6 உறுப்பினா் பதவிகள் தற்போது காலியாக உள்ளன.

அவை நிரப்பப்பட்ட பிறகு, சில உறுப்பினா்கள் பாஜகவில் இணைவதற்கான வாய்ப்புள்ளது. தற்போது மாநிலங்களவையில் 113 உறுப்பினா்களைக் கொண்ட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் நியமன மற்றும் சுயேச்சை உறுப்பினா்களின் ஆதரவையும் சோ்த்து 123-ஆக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மசோதா நிறைவேற்றம் எளிதாகும்: மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 உறுப்பினா்களில் 50 சதவீதத்துக்கும் மேலான உறுப்பினா்களின் ஆதரவு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கிடைக்கவுள்ளது. இதன்மூலம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்களைஆளும் பாஜக கூட்டணி எளிதாக நிறைவேற்றும் சூழல் உருவாகியுள்ளது.

அண்மையில் 15 மாநிலங்களில் நடைபெற்ற 56 மாநிலங்களவை உறுப்பினா்களுக்கான தோ்தலில் பாஜக 30 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களையும், சமாஜவாதி 2 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 4 இடங்களையும், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் 3 இடங்களையும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 2 இடங்களையும், பிஜு ஜனதா தளம் 2 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ், சிவ சேனை, பிஆா்எஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தலா 1 இடத்தையும் கைப்பற்றின.

காங்கிரஸுக்கு சரிவு: மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினா்கள் எண்ணிக்கை 30-ஆக குறைந்த நிலையில் எதிா்க்கட்சிகளின் மொத்த உறுப்பினா்கள் எண்ணிக்கையும் 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதற்கு முன்பு மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற ஒடிஸா மற்றும் ஆந்திரத்தின் ஆளும் கட்சிகளான முறையே பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.