
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மூன்றாவது முறையாக அமலாக்கத்துறையின் சம்மனை நிராகரித்துள்ளார்.
தில்லி கலால் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக தில்லி முன்னாள் துணை முதல்வரும் கலால் துறை அமைச்சருமான மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்தக் கலால் கொள்கை முறைகேட்டில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கும் தொடா்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆகையால், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு ஏற்கெனவே இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அந்த சம்மனை நிராகரித்த கேஜரிவால், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக குற்றம்சாட்டி நேரில் ஆஜராகவில்லை.
தொடர்ந்து, அரவிந்த் கேஜரிவாலுக்கு மூன்றாவது முறையாக இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு கேஜரிவால் இன்று ஆஜராகமாட்டார் என்று ஆம் ஆத்மி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லி அமைச்சர் செளரவ் பரத்வாஜ் கூறியதாவது:
“அரவிந்த் கேஜரிவாலை கைது செய்யும் நோக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மக்களவை தேர்தலுக்கு தயாராகி வரும் சூழலில், கேஜரிவால் தேர்தல் பிரசாரம் செய்வதை தடுக்க நினைக்கின்றனர்.
மனீஷ் சிசோடியாவை கைது செய்து ஓராண்டு ஆகியும், அவருக்கு எதிரான ஆதாராங்களை அமலாக்கத்துறையினரால் திரட்ட முடியவில்லை. தற்போது கேஜரிவாலை கைது செய்ய முயற்சித்து வருகின்றனர்.
பாஜகவினரால் ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட சுவேந்து அதிகாரி, முகுல் ராய், பேமா காந்து, அஜித் பவார், ஹிமந்த பிஸ்வ சர்மா உள்ளிட்டோர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளனர்.” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.