திரிணமூல் காங்கிரஸ் நடத்தும் மத நல்லிணக்கப் பேரணிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் நடத்தவுள்ள மத நல்லிணக்கப் பேரணிக்கு அனுமதி வழங்கியது கொல்கத்தா உயர் நீதிமன்றம்.
கொல்கத்தா உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
கொல்கத்தா உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)

திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் நடத்தவுள்ள மத நல்லிணக்கப் பேரணிக்கு அனுமதி வழங்கி கொல்கத்தா உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறும் ஜன.22ம் தேதி மேற்குவங்கத்தில் மத நல்லிணக்கப் பேரணி நடத்தப் போவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.

இதனை எதிர்த்து பாஜக எம்.எல்.ஏ.வும், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

ஜன.22ம் தேதி ஏற்கனவே பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் திரிணமூல் காங்கிரஸின் மத நல்லிணக்கப் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரினார்.

“அன்றைய தினம் நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் பாதிக்காதவாறு நடைபெறுவதற்கு மாநில அரசு பொறுப்பாகும். பேரணியின் போது எந்த மதத்தினரையும் புண்படுத்தாமலும், அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்திய தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் மத நல்லிணக்கப் பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

முன்னதாக, மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஜனவரி 22-ஆம் தேதி மத நல்லிணக்கப் பேரணி நடத்தவுள்ளேன். 

காளி கோயிலில் பிரார்த்தனை நடத்தியபின், அங்கிருந்து இந்தப் பேரணி தொடங்கப்படும். அதையடுத்து ஹசரா முதல் பூங்கா விளையாட்டு மைதானம் வரை இந்தப் பேரணி சென்று அங்கு கூட்டம் நடைபெறும். நாம் செல்லும் வழியில் உள்ள மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் மற்றும் கோயில்களில் வழிபாடுகள் நடத்தப்படும்.

இந்தப் பேரணியில் பங்கேற்பதற்கு அனைவரையும் வரவேற்கிறேன். அதே நாளில் பிற்பகல் 3 மணியளவில் எனது கட்சித் தொண்டர்கள் அனைத்து மாவட்டங்களிலும் பேரணி நடத்துவார்கள்.” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com