அயோத்தியில் பால ராமர் பிரதிஷ்டை விழா! நடந்ததும் நடக்கவிருப்பதும்!

ஒரு சகாப்தத்தில் மிக அபூர்வமாக நிகழக் கூடியவொன்றான பால ராமர் பிரதிஷ்டை விழா பற்றி இங்கே  விரிவாகக் காண்போம். 
அயோத்தியில் பால ராமர் பிரதிஷ்டை விழா! நடந்ததும் நடக்கவிருப்பதும்!

அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட ராமர் கோயிலில் மூலவர் பிரதிஷ்டை விழா திங்கள்கிழமை நடைபெறுகிறது. கோயில் பற்றிய சின்னச் சின்னத் தகவல்களும் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. இவற்றில் சில சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை. ஒரு சகாப்தத்தில் மிக அபூர்வமாக நிகழக் கூடியவொன்றான பால ராமர் பிரதிஷ்டை விழா பற்றி இங்கே  விரிவாகக் காண்போம். 

மூலவர் சிலைக்கான மாதிரி எது என முடிவெடுக்க கோயில் அறக்கட்டளையின் முன்பு மூன்று தேர்வுகள் இருந்தன. எந்தச் சிலை, மூலவராகத் தெரிவு செய்யப்படவுள்ளது என்பது குறித்த முதல்முதலாகத் தெரிந்து வெளியிட்டது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். மைசூருவைச் சேர்ந்த ஸ்தபதி அருண் யோகிராஜ் உருவாக்கிய பால ராமர் சிலை, மூலவர் சிலையாக வழிபடப்படவுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை சிலையின் படம் கசிவதற்கு முன்பு, மக்களிடையே அது குறித்து அறியும் ஆர்வம் அதிகமாகவே இருந்தது. சிலையின் முழுவடிவை மூலவர் பிரதிஷ்டைக்குப் பிறகே வெளியிடும் ஒருங்கிணைப்பாளர்களின் திட்டம் கலைந்தது. வேதத்தின்படி சொல்லப்பட்ட முறையும் அதுதான்.

51 அங்குல உயர, 1.5 டன் எடை கொண்ட சிலை, கருவறையில் ராம இயந்திரம் பதிக்கப்பட்டதற்கு அடுத்த நாள், முகம் மறைக்கப்பட்டுப் பொருத்தப்படும். ராமரின் கண்களை மூடியுள்ள துணி பிராண பிரதிஷ்டைக்கு பிறகு அகற்றப்படும். 5 வயது பாலகன் வடிவில் உள்ள ராமர் சிலை பிரதிஷ்டைக்குப் பிறகு உயிரோட்டம் பெறும். சனாதன தர்மத்தின்படி பிராண பிரதிஷ்டை சடங்குகள், பக்தருக்கும் சிலையில் உறைந்திருக்கும் தெய்விக ஆற்றலுக்கும் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

மூலவராக வழிபடவிருக்கும் பால ராமருக்கு பிறந்த இடத்தில் கடந்த ஐந்து நூற்றாண்டுகளாக அவருக்கென்று முறைப்படியான கோயில் இல்லை. நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடந்த சட்ட போராட்டத்திற்கு பிறகு ராமர் தனக்கான உரிமையை பெற்றுள்ளார். ஜனவரி 22-ல் நடைபெறவிருக்கும் மூலவர் பிரதிஷ்டை விழாவுக்கு ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளை சார்பில் 7500-க்கும் அதிகமானோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

சனாதன தர்மம்- நான்கு பெரும்பிரிவுகளைக் கொண்டிருக்கிறது- சைவம், வைணவம், சாக்தம் மற்றும் காணாபத்தியம். இவை முறையே சிவன், விஷ்ணு, திரிபுர சுந்தரி மற்றும் கணபதியை முதன்மைத் தெய்வங்களாகக் கொண்டுள்ளன. அறிஞர்களின் கூற்றுப்படி, பிரதிஷ்டைக்கான சடங்குகள் நான்கு பிரிவுகளுக்கும் பொதுவானவை, எனினும் மூலவரைப் பொருத்து இணை சடங்குகள் மாறுபடும்.

ராமானந்தி பிரிவு

அயோத்தி ராமர் கோயில் நிர்வாகத்தின் மையம் என ராமானந்தி பிரிவைச் சொல்லலாம். வைஷ்ணவ பிரிவுகளில் மிகப் பெரியதான ராமானந்தி பிரிவு ராமருடன் கொண்டிருக்கும் ஆழமான உறவின் காரணமாகப் புகழ் பெற்றது. விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமரின் மகன்களான லவன் மற்றும் குசனின் வாரிசுகளாக ராமானந்தி பிரிவினர் தங்களைக் கருதிக் கொள்கிறார்கள்.

ராமானந்தி சம்பிரதாயம்- ராமர், சீதை மற்றும் ஹனுமனை நேரடியாக வழிபடுவதை வலியுறுத்துகிறது. அவர்களின் வழிபாட்டு முறை அயோத்தியில் பெருமளவில் பின்பற்றப்படுகிறது. நகரை ஒன்றிணைக்கும் இழையாக செயல்படும் வழிபாட்டு முறை இது. 1949 வரை பாபர் மசூதியின் முன்புறம் இருந்த ராமர் சபுத்ராவின் (தளம்) காப்பாளர்களாகவும் மற்றும் 1949-ல் பாபர் மசூதியில் கண்டறியப்பட்ட சிலைகளின் பொறுப்பாளர்களாகவும் விளங்கிய நிர்-மோஹி அஹாரா பிரிவு, ராமானந்தி பிரிவுகளில் ஒன்று. 

15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, மதம் - சமூக சீர்திருத்தவாதியான ஜகத்குரு ஸ்ரீ ராமானந்தச்சாரியார் உடன் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள் இந்தப் பிரிவினர். இடைக்கால இந்தியாவின் பக்தி இயக்கத்தின் முன்னோடியான இவர் ஒரு சமத்துவவாதி. மதம் மற்றும் ஆன்மிகம் சார்ந்து சாதியால் உருவாகும் ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வைஷ்ணவ பைராகி என்கிற பிரிவை உருவாக்கினார். ராமானந்தி பிரிவு 36 உப-பிரிவுகளாக பரிணமித்துள்ளது.

கேள்வி நேரம்

பிரதிஷ்டை விழாவுக்கான தேதி குறித்து தொடர்ச்சியாக கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஏன் ஜனவரி 22? பொதுத் தேர்தலுக்கு பிறகான ஒரு தேதியாக ஏன் இல்லை? கோபுரக் கட்டுமானங்கள் முடிவடைந்திருக்காதபோதும் ஏன் இவ்வளவு அவசரமாக இந்த ஏற்பாடுகள்? சில மாதங்களில் நடைபெறவிருக்கும் தேர்தலில் ராமரைத் துருப்புச் சீட்டாகக் கொள்ளவா? ஏன் பிரதமர் மோடி முக்கிய யஜ்மனாக (நிகழ்வுகள் யஜ்மனை முன்வைத்து தொடங்கப்படும்) விழாவில் பங்கேற்க வேண்டும்? வேறு வேதாந்திகளோ சங்கராச்சாரியார்களோ இதனை செய்யவில்லை? இந்தக் கேள்விகளுக்கான பதில் நாம் யாரிடம் விவாதிக்கிறோம் என்பதை பொருத்து மாறுபடும். ஆனால் இது எதுவும் இயல்பாகவே எழுகிற தரிசன மனநிலையை குறைக்க போவதில்லை.

ஏன் ஜன. 22?

இந்த தேதி மற்றும் நேரம் என்பது, வேதங்கள் மற்றும் ஜோசியத்தில் வல்லுநரான காசியின் தலைமை குருக்கள் முடிவு செய்தது என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். பிரதிஷ்டை செய்வதற்கான உகந்த நேரமாக அவர்கள் தேர்வு செய்த நாள், மிருகசீரிஷ நட்சத்திரம் நடைபெறும் ஜனவரி 22. நாளின் அபிஜீத் முகூர்த்ததில் மூல முகூர்த்தமான 84 விநாடிகள் பிரதிஷ்டைக்கான நேரமாக அவர்கள் தீர்மானித்து அளித்துள்ளனர்.

காலை 11.51 தொடங்கி 12.33 வரை அபிஜீத் முகூர்த்தம் நிலவுகிறது. மூல முகூர்த்தம் என்பது வெறும் 84 விநாடிகள்- மதியம், நேரம் 12:29.08 முதல் 12:30.32-க்குள் நீடிக்கும். பிராண பிரதிஷ்டை செய்வதற்கான நேரம் இது. நேரத்தின் தாக்கத்தை முகூர்த்தம் தீர்மானிக்கிறது. நாள்தோறும் மதியம் அபிஜீத் முகூர்த்தம் வரும். 

பண்டிதர் கணேஷ்வர் சாஸ்திரி திராவிட், நேரம் மற்றும் தேதியை தீர்மானித்துள்ளார். ஜோதிட வல்லுநர் மற்றும் சங்கவேத வித்தியாலயாவில் புகழ்பெற்ற குருவான இவர், அயோத்தியில் நடைபெறும் பிராண பிரதிஷ்டை சடங்குகளை மேற்பார்வையிடுகிறார்.

அவர், ”முகூர்த்தத்தில் பிரதிஷ்டை செய்வது- கோயிலை சூரியன் மற்றும் நிலவு இருக்கும் வரை காலம் அழியாமல் காக்கும்” என்கிறார். அபிஜீத் முகூர்த்தத்தில் தான் விஷ்ணு, தோஷங்களை தனது சுதர்சன சக்கரம் கொண்டு அழித்தது. ராமர் பிறந்த நேரமும் சூரியன் உச்சத்தில் இருக்கும் இதே முகூர்த்தம்தான். குருவின் இடத்தால் இந்த முகூர்த்ததில் பிரதிஷ்டை செய்யும்போது நேர்மறையான விளைவுகளை ஏற்படும். நாட்டில் கல்வி துறையில் முன்னேற்றம், மக்களிடையே நேர்மறை சிந்தனைகள், மக்களின் மனநிலை மேம்பாடு மற்றும் அறம்சார்ந்த நெறிகளை அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜோதிட வேதங்களை மனதில் கொண்டே கோவிலுக்கு ராஜிவ் காந்தி அடிக்கல் நாட்டியபோதும், இப்போது பிரதிஷ்டைக்கான நேரத்தையும் தான் குறித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

குரு முழுமையான ஆற்றலோடு திகழும் இந்த நாள், கற்றல் மற்றும் அறிவுக்கு மூலவரான குருவின் பலன்களைக் கிடைக்கச் செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிராண பிரதிஷ்டையின் சடங்குகள்

பிரதிஷ்டை விழா தொடங்க, சடங்குகளை மேற்கொள்ள  ‘யஜ்மன்’ நியமிக்கப்பட வேண்டும். சடங்குகளை யஜ்மன் அவரது மனைவியுடன் சேர்ந்து தொடங்கி வைக்க வேண்டும். இங்கு அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா தம்பதியர் தொடங்கி வைக்கிறார்கள். உடன் நாடு முழுவதுமிருந்து 13 இணையர்கள் முக்கிய நிகழ்வில் பங்கேற்கிறார்கள். ஜன.22 பிரதிஷ்டை விழாவில் முதன்மை யஜ்மனாக பிரதமர் நரேந்திர மோடி பங்கு வகிக்கவுள்ளார்.

பிரதிஷ்டைக்கு முன்பாக நீர், தானியங்கள், நெய், புஷ்பம், பழம், மூலிகைகள் ஆகியவற்றைக் கொண்டு கருவறைத் திருமேனி அபிஷேகிக்கப்படும்.

கோயில் முற்றம் 81 கலச மூலிகை நீரால் தூய்மைப்படுத்தப்படும். அதே வேளையில் வாஸ்து வழிபாடு செய்யப்படும்.

பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 125 கலச புனித நீர் சிலை மீது ஊற்றப்படும். அதன் பிறகு மகாபூஜை நடத்தி உரிய இடத்தில் சிலை நிறுவப்படும்.

நிகழ்வின் இறுதியில் தெய்விக ஆற்றல் அல்லது பிராணன் சிலைக்கு மாற்றப்படும். இந்த நிகழ்வு, மந்திரங்கள் ஓதப்படுவதன் மூலமாகவும் முத்திரைகள் மூலமாகவும் செய்யப்படும்.

கடவுளுக்கு 16 பிரசாதங்கள் படைக்கப்படும். மஹா ஆரத்திக்கு பிறகு இது நடைபெறும். மஹா ஆரத்தியின்போதுதான் பக்தர்களுக்கு முதன்முறையாக பால ராமர் காட்சி தருவார்.

சிலையின் ஒவ்வொரு பாகத்தையும் பூஜை மேற்கொள்பவர்கள் தொடுவர். ஒவ்வொரு பாகத்திலும் உறையவிருக்கும் வெவ்வேறு கடவுளர்களைச் சுட்டிக் காட்டி உணர்த்துவர். உதாரணமாக கைகளில் இந்திரர், இதயத்தில் பிரம்மா.

நிறைவான நிகழ்வு என்பது சிலையின் கண்களைத் திறப்பது. விழாவின் உச்ச தருணம். அநேகமாக பிரதமர் இந்த சடங்கை மேற்கொள்வார். இதைத்தொடர்ந்து, மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கருதப்படும்.

நான்கு சங்கராச்சாரியார்களின் புறக்கணிப்பு

பூரி கோவர்தன பீடத்தின் சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி, சிருங்கேரி பாரதி தீர்த்தர், துவராகை சதானந்த சரஸ்வதி மற்றும் உத்தரகண்ட் ஜோதிர் மடத்தின் அவிமுக்தேஸ்வரானந்தர் ஆகியோர் வெவ்வேறு காரணங்களுக்காக இந்த  மூலவர் பிரதிஷ்டை விழாவைப் புறக்கணித்துள்ளானர். அதே வேளையில் சிருங்கேரி மற்றும் துவராகா மடாதிபதிகள் அயோத்தி கோயிலுக்கு தங்கள் வரவேற்பைத் தெரிவித்துள்ளனர்.

அவிமுக்தேஸ்வரானந்தர் முழுமை பெறாத கோயிலில் பிரதிஷ்டை நடைபெறுவதை ஏற்க முடியாது என மறுத்துள்ளார். நிச்சலானந்தருக்கு மோடியின் இருப்பு பிரச்னையாக உள்ளது. தன்னை போன்ற மத குருக்கள் நின்று வழிநடத்த வேண்டிய மத விழாக்களில் அரசியல்வாதிகள் பங்குபெறுவதை அவர் விரும்பவில்லை.

பின்வாங்கல்

தேதி தீர்மானித்த கணேஷ்வர், புதிதாக கட்டப்படும் வீட்டில் வாஸ்து சாந்தி செய்யப்பட்ட பிறகு கட்டுமானம் முடியும் முன்பே குடிபோவது போல வழிபாட்டிலும் செய்யலாம். முழு கட்டுமானத்துக்கு பிறகு தான் பிரவேசம் செய்ய வேண்டும் என எங்குமே குறிப்பிடப்படவில்லை என்கிற வாதத்தை அவர் முன்வைக்கிறார்.

வேதங்கள் பகுதியளவு கட்டப்பட்ட கோயில்களுக்கு வேறு வேறான முறைமைகளை முன்வைக்கிறது. முழுமையாக கட்டப்பட்ட கோயில் எனில் பிராண பிரதிஷ்டை, கோபுரத்தின் உச்சியில் இருக்கும் கலசத்தை நிர்மாணிப்பதுடன் இணைத்து செய்யப்பட வேண்டும். துறவியர் மட்டுமே அதனை செய்ய வேண்டும். குடும்பஸ்தர்களைக் கொண்டு செய்யக்கூடாது.

முழுமை பெறாத கோயில்களில் பிராண பிரதிஷ்டை- கூரை அமைத்தல், கதவு பொருத்துதல் மற்றும் சில சடங்குகளுக்கு பிறகு செய்யப்படலாம். கட்டுமானம் முடிந்த பிறகு மற்றொரு பொருத்தமான முகூர்த்தத்தில் கலசம் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என கணேஷ்வர் தெரிவித்தார். கோயில் முழுமையாக கட்டப்பட்டால் மோடி யஜ்மனாக பங்கேற்க இயலாது. 

அயோத்தியில் ராமர் கோயிலில் கருவறை முழுமையாக கூரை மற்றும் கதவுடன் கட்டப்பட்டிருப்பதால் பிரதிஷ்டை செய்யலாம் என கணேஷ்வர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ ஸ்ரீ சிவசங்கர் மற்றும் ஸ்ரீ எம் ஆகியோர் சோம்நாத், பத்ரிநாத் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய கோயில்களை உதாரணமாக காட்டுகிறார்கள்.  “கோயில் கட்டுமானம் பற்றிய வேதங்கள் எதிலும் பிராண பிரதிஷ்டை கோயில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு தான் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்படவில்லை. ஆனால் கருவறை கட்டி முடிக்க வேண்டும் என அதில் சொல்லப்பட்டுள்ளது. பத்ரிநாராயணன் கோயிலில் கட்டுமானம் முடியும் முன்பே ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தார். ராமேஸ்வரத்தில் சிவனை, ராமரே அவ்வாறு தான் பிரதிஷ்டை செய்தார். கோயில் முழுமையாக கட்டப்பட வேண்டும் எனச் சொல்வது சரியல்ல” என ஸ்ரீ எம் தெரிவித்துள்ளார். 

சின்னச் சின்னச் சர்ச்சைகள் பேசப்பட்டாலும் நாடே ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது அயோத்தி கோவிலில் பால ராமர் பிரதிஷ்டை நிகழ்வை! 

தமிழில்: பிரபாகரன் சண்முகநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com