அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் உச்சநீதிமன்றத்தில் 13 முன்னாள் நீதிபதிகள் கலந்து கொண்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கருவறையில் குழந்தை ராமரின் சிலை நேற்று நண்பகல் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பூஜையில், அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் உள்பட உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அயோத்தி கோயில் நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று உச்சநீதிமன்றத்தின் 13 முன்னாள் நீதிபதிகள் நேற்றைய விழாவில் கலந்து கொண்டனர்.
இதில், அயோத்தி வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வில் இருந்த 5 நீதிபதிகளில் அசோக் பூஷண் மட்டுமே வருகை தந்திருந்தார்.
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகள் என்வி ரமணா, யுயு லலித், ஜேஎஸ் கேஹர், விஎன் காரே உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
மேலும், முன்னாள் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ஆதர்ஷ் கோயல், வி.ராமசுப்ரமணியம், அனில் டாவே, வினீத் சரண், கிருஷ்ணா முராரி, ஞயான் சுதா மிஸ்ரா, முகுந்தன் சர்மா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய அமர்வின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், எஸ்ஏ போப்டே, அப்துல் நாஷர் மற்றும் டிஒய் சந்திரசூட்(தற்போதய தலைமை நீதிபதி) ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஆகியோரும் நீதிமன்ற பணிகள் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.