இந்தியா கூட்டணிக்குப் பின்னடைவு? தனித்துப் போட்டியிட மம்தா முடிவு

மேற்கு வங்க மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணிக்குப் பின்னடைவு? தனித்துப் போட்டியிட மம்தா முடிவு


மேற்கு வங்க மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, கூட்டணிப் பேச்சுவார்த்தையில் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், புதன்கிழமை, தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்திருப்பது இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தியா கூட்டணியில் மிக முக்கியக் கட்சியாக அங்கும் வகித்து வந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட மனக்கசப்பு வளர்ந்து இந்த நிலையை அடைந்திருப்பதாகவும், மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, தேர்தல் முடிவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியுடன் இணைவதாகவும் அறிவித்திருக்கிறார் மம்தா பானர்ஜி.

இன்று கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி கூறுகையில், காங்கிரஸ் கட்சியுடன் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் தனியாகவே போட்டியிடுவோம், தேர்தல் முடிவுக்குப் பிறகு, அனைத்திந்திய அளவில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியா கூட்டணியில் இதுவரை தொகுதிப் பங்கீடு தொடர்பாக யாரிடமும் எதுவும் பேசவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாரத நீதி நடைப்பயணம் வியாழக்கிழமை மேற்கு வங்க மாநிலத்தில் நுழையவிருக்கும் நிலையில், இதில் கொல்கத்தா தவிர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து கருத்துக் கூறிய மம்தா பானர்ஜி, அவர்கள் எனது மாநிலத்துக்கு வருகிறார்கள். ஆனால், அது பற்றி எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு மரியாதை கூட தெரியவில்லை என்று மம்தா குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் - திரிணமூல் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட மனக்கசப்பே இந்த முடிவுக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக, செவ்வாயன்று பேசிய மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் 10 முதல் 12 மக்களவைத் தொகுதிகளைக் கேட்பது நியாயமற்றது என்று கடுமையாக விமரிசித்திருந்தார். தங்களது மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மோசமான நிலைமையையும் அவர் சுட்டிக்காட்டினார். அதாவது, 2014ஆம் ஆண்டு நான்கு தொகுதிகளிலும், 2019ஆம் ஆண்டு 2 தொகுதிகளிலும்தான் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது.

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், மேற்குவங்கத்தில் மொத்துமுள்ள 42 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 22 இடங்களை வென்றது. பாஜக 18 இடங்களைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்,  தங்கள் மாநிலத்தில் 2 தொகுதிகளைத்தான் காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுக்க மம்தா முடிவு செய்திருந்தார். ஆனால் காங்கிரஸ் தரப்பில் 10 - 12 தொகுதிகளைக் கேட்டுள்ளனர் என்று தெரிகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com