மம்தா பானர்ஜிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!

காங்கிரஸின் நடைப்பயணத்திற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து தருமாறு மேற்குவங்க முதல்வருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். 
மம்தா பானர்ஜிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!
Published on
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை நியாய நடைப்பயணம் அஸ்ஸாமிலிருந்து, மேற்கு வங்கத்தை அடைந்துள்ளது. அடுத்த சில நாட்கள் மேற்குவங்கத்தில் நடைபெறவுள்ள இந்த நடைபயணத்திற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, மல்லிகார்ஜுன கார்கே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

தன் கடிதத்தில், 'நடைபயணத்தில் உள்ள காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும், தொண்டர்களுக்கும், ராகுல் காந்திக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரியுள்ளார் கார்கே. அஸ்ஸாமில் நடைப்பயணம் பல பிரச்னைகளைச் சந்தித்த நிலையில், 'சில தவறான ஆட்களால் நடைப்பயணத்திற்கு தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நடைப்பயணம் பாதுகாப்பான முறையில் நடப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறேன்' என எழுதியுள்ளார். 

'காந்தி குடும்பத்துடன் உங்களுக்கு இருக்கும் அன்பான உறவைப் பற்றி நன்கு அறிவேன். நடைப்பயணம் பாதுகாப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் நீங்கள் உடனடியாக செய்வீர்கள் என்பதுவும் எனக்குத் தெரியும். இருப்பினும் கடிதம் ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுப்பது சிறப்பாக அமையும் என எண்ணுகிறேன்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.  

'பாஜக உருவாக்கியுள்ள ஜாதி, மத பிரிவினைகளைத் தளர்த்தி மக்களை ஒன்றாக்குவதே இந்த நடைப்பயணத்தின் குறிக்கோளாக ராகுல் காந்தி எப்போதும் கருதுகிறார். இந்த நாட்டில் பலவீனமாக இருப்பவர்களுக்கும் சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும்  அரசியல் நீதிகளைப் பெற்றுத் தருவதே இதன் நோக்கம்.

'அதனால்தான் இந்த அரசியலற்ற முயற்சி பலகோடி இந்திய மக்களை ஈர்த்துள்ளது. மக்களிடையே உருவாக்கப்பட்டுள்ள சாதி, மத பாகுபாட்டினை அறுத்தெறிந்து அனைவருக்குமான மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்குவதே இதன் நோக்கம்' என அவர் குறிப்பிட்டுள்ளார். 

அஸ்ஸாமில் காங்கிரஸ் நடைப்பயணத்திற்கு பல தடைகளும், பிரச்னைகளும் உருவானது. பாஜக ஆதரவாளர்கள் நடைப்பயணத்தை எதிர்த்து, ராகுல் காந்தியின் பேருந்து செல்லும் வழியில் கொடிகளுடன் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ராகுல் காந்தியின் மீது அஸ்ஸாம் காவல்துறை வழக்கு பதிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய ஒற்றுமை நியாய ஒற்றுமை நடைப்பயணம் கடந்த 14 ஆம் நாள் மணிப்பூரில் துவங்கியது. மார்ச் 20ல் மும்பையில் முடிவுபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com