இந்தியா கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை: ஜெய்ராம் ரமேஷ் 

இந்தியா கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்த பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப்படம்)
ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப்படம்)

இந்தியா கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் கூட்டணி குறித்து சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “இந்தியா கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. கூட்டணியில் சில பிரச்னைகளை ஏற்படுத்துவதற்கு பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. 

நிதீஷ் குமாருடன் பேசுவதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சித்து வருகிறார். விரைவில் இருவரும் பேசி பிரச்னையை தீர்ப்பார்கள். 

இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்களான மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், பிகார் முதல்வர் நிதீஷ் குமாரும் இறுதிவரை இந்தியா கூட்டணியில் தொடர்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.” என்று கூறினார்.

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தில் தனித்துப் போட்டியிடுவதாகவும், அதேநேரத்தில் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் தொடர்வதாகவும் சமீபத்தில் அறிவித்தார்.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சி தலைவர்கள் சிலர் கூறி வருகின்றனர். இருப்பினும் இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் எதுவும் கூறவில்லை. 

இந்தியா கூட்டணி பின்னடைவை சந்தித்து வருவதாக கூறப்படும் வேளையில், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் இடையேயான தொகுதி பங்கீடு சுமுகமாக நிறைவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com