நிதீஷ்குமார் நாளை காலை ராஜிநாமா.. மாலையில் பதவியேற்பு?

பாஜகவிலிருந்து பிரிந்து வந்து ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிதீஷ் குமார் பாஜகவில் நாளை சேருகிறார் என்று கூறப்படுகிறது.
நிதீஷ் குமார் (கோப்புப்படம்)
நிதீஷ் குமார் (கோப்புப்படம்)


பாஜகவிலிருந்து பிரிந்து வந்து ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் நிதீஷ் குமார் பாஜகவில் நாளை சேருகிறார் என்று கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில், பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதீஷ் குமார், பிகார் ஆளுநர் மாளிகைக்குச் சென்று தனது ராஜிநாமா கடிதத்தை அளிக்கவிருப்பதாகவும், நாளை மாலை ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியில் மீண்டும் முதல்வராக பதவியேற்கவிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிகார் முதல்வராக நாளை மாலை 4 மணிக்கு நிதீஷ் குமார் பதவியேற்கப்போவதாக தகவலறிந்த வட்டாரங்களிலிருந்து கூறப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனையெல்லாம் உறுதிப்படுத்தும் வகையில், பிகார் அதிகாரிகள் மூன்று பேர் இன்று பிகார் ஆளுநர் மாளிகை சென்று புதிய அமைச்சரவை பொறுப்பேற்புக்கான ஏற்பாடுகள் குறித்து ஆளுநரிடம் கலந்தாலோசனை நடத்தி வந்ததாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்படுவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிதீஷ் குமார், அந்த பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்தார். தொடர்ந்து இந்தியா கூட்டணியில் தான் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த நிலையில், அவர் ஒட்டுமொத்தமாகக் கூட்டணியையே புறக்கணிக்கும் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கூட்டணியிலிருந்து வெளியேறி, பாஜகவுடன் புதிய அரசை அமைப்பது என்று முடிவெடுத்து, அதற்கேற்ப காய்களை நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையெல்லாம் விட, கிடைக்கும் விவரங்களில் உண்மை என்ன என்பதை அறிய லாலு பிரசாத் தொடர்ந்து நிதீஷ்குமாரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை என்றும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நிதீஷ் குமாரிடம் பேச முயன்றும், அவர் மிகவும் பிஸியாக இருக்கிறார் என்று கூறப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பிகாரில் ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தள அமைச்சர்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறுத்திவைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பறந்திருப்பதாகவும், லாலு பிரசாத்துடனான கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியே வர நிதீஷ் குமார் முடிவெடுத்திருப்பதன் விளைவாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com