
மணிப்பூரில் இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் கிராமத் தன்னார்வலர் ஒருவர் பலியானார்.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரியிருந்தனர். இதற்கு குக்கி-நாகா சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில், இவ்விரு சமூகத்தினருக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டது.
இதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினா். ஏராளமான வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.
அது முதல் மணிப்பூரில் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்த நிலையிகல் இம்பால் கிழக்கு மற்றும் காங்போக்பி மாவட்டங்களுக்கு இடையே சதாங் கிராமத்தில் ஆயுதமேந்திய ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் கிராமத் தன்னார்வலர் ஒருவர் பலியானார்.
மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் இம்பாலில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாதுகாப்புப் படையினர் மலைப்பாங்கான பகுதிக்கு விரைந்ததைத் தொடர்ந்து சண்டையிட்ட குழுக்கள் பின்வாங்கின. இந்த சம்பவத்தால் மணிப்பூரில் பரபரப்பு நிலவுகிறது.