பிச்சைக்காரர்கள் இல்லாத 30 நகரங்களை உருவாக்க திட்டம்

நாட்டில் உள்ள 30 நகரங்களில் பிச்சைக்காரர்கள் இல்லாத நிலையை எட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பிச்சைக்காரர்கள் இல்லாத 30 நகரங்களை உருவாக்க திட்டம்

புது தில்லி: வடக்கில் அயோத்தி, கிழக்கில் குவகாத்தி, மேற்கில் திரையம்பகேஸ்வரர், தெற்கில் திருவனந்தபுரம் என நாட்டில் உள்ள 30 நகரங்களில் பிச்சைக்காரர்கள் இல்லாத நிலையை எட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுபோன்ற மாநகரங்களில் பிச்சையெடுக்கும் பெரியவர்கள், குழந்தைகள் பெண்களுக்கு மறுநிவாரணம் வழங்கி, அவர்கள் மரியாதைக்குரிய வாழ்வை மேற்கொள்ள வழி ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் ஆய்வுக்குள்படுத்தப்பட்டுள்ளது.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தத் துறை சார்பில், மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு உதவியளித்து, நகரப் பகுதிகளில் பிச்சைக்காரர்கள் அதிகம் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, வரும் 2026ஆம் ஆண்டுக்குள் பிச்சைக்காரர்கள் இல்லாத நகரங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்த நகரங்களின் பட்டியலில் மேலும் பல நகரங்கள் இணைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முதலில், நாட்டின் மத ரீதியான, வரலாற்று மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் பெற்ற நகரங்களைக் கருத்தில் கொண்டு முதல் கட்டமாக 30 நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. குறைந்தபட்ச தனிநபர் வாழ்முறைக்கான ஆதரவளிக்கும் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது.

பிச்சையெடுப்பவர்களுக்கு நிவாரணம் வழங்கி, அவர்கள் மரியாதைக்குரிய வாழ்வை வாழ்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து, அவர்கள் தொடர்ந்து அவ்வாழ்வைத் தொடர்வதைக் கண்காணிப்பதன் மூலம் நாட்டில் பிச்சைக்காரர்கள் இல்லாத நிலையை உருவாக்க திட்டமிடப்பட்டுளள்து.

இதற்காக, மத்திய அரசு சார்பில் ஒரு செயலி உருவாக்கப்பட்டு பிப்ரவரி மாதத்தில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது. இதில், பிச்சைக்காரர்கள் கணக்கிடப்பட்டு, தொடர்ந்து திட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வு பதிவிடப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது பட்டியலிடப்பட்டிருக்கும் 30 மாநகரங்களில், 24 நகரங்களிலிருந்து, திட்ட செயல்முறை அறிக்கை கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், கட்டாக், உதய்பூர் உள்ளிட்ட சில நகரங்களிலிருந்து செயல்முறை அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பிச்சையெடுப்பவர்களின் வாழ்வாதாரத்தை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து ஆய்வறிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை, மைசூரு, கோழிக்கோடு, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களில் இந்த ஆய்வு ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.

இந்த செயல்முறையின்படி, மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு, மத்திய அரச உரிய நிதியை அனுப்பிவைக்கும். அதன்படி, ஆய்வு செய்யப்பட்டு, அவர்களை மீட்டு, தங்குமிடம் அமைத்துக்கொடுத்து, கல்வி அல்லது தொழில் திறன் தேவைப்படுவோருக்கு அதற்குரிய பயிற்சிகள் அளித்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்து விரிவாக விளக்கமும் அமைச்சகத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com