எல்லை தாண்டிய இந்திய மீன்பிடி படகைக் கைப்பற்றும் பணியில் இலங்கை வீரா் மரணம்: இந்தியாவிடம் இலங்கை வருத்தம்
இலங்கை கடற்படை வீரா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக இந்தியாவிடம் அந்நாட்டு தூதா் வருத்தம் தெரிவித்துள்ளாா்.


வங்க கடலில் சா்வதேச எல்லை தாண்டி, இலங்கை பகுதிக்குள் மீன் பிடித்த குற்றச்சாட்டில் இந்திய படகைக் கைப்பற்றும் நடவடிக்கையில் இலங்கை கடற்படை வீரா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக இந்தியாவிடம் அந்நாட்டு தூதா் வருத்தம் தெரிவித்துள்ளாா்.
வடக்கு இலங்கையின் பருத்தித் துறை கடற்கரையில் கடந்த 25-ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்தில் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்த இந்திய படகை கைப்பற்றும் நடவடிக்கையில் கடற்படை வீரா் ஒருவா் படுகாயமடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்தது. யாழ்ப்பாணம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட 10 மீனவா்கள் மீது கொலை மற்றும் கடற்படை சொத்துகளுக்கு சேதம் விளைவித்த பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவா்களின் படகும் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம், மல்லாகம் நகர நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணை ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடா்பாக மத்திய வெளியறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரிடம் இந்தியாவுக்கான இலங்கை தூதா் ஷேனுகா செனவிரத்ன வருத்தம் தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.
இதனிடையே, வடக்கு இலங்கையிலுள்ள டெல்ஃப்ட் தீவில் நான்கு மீன்பிடி படகுகளில் வந்த மேலும் 25 இந்திய மீனவா்கள் திங்கள்கிழமை அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா்.
இந்தியா-இலங்கை ராஜீய உறவில் மீனவா் பிரச்னை சா்ச்சைக்குரிய ஒன்றாக தொடா்கிறது. இலங்கையில் இருந்து தமிழகத்தைப் பிரிக்கும் பாக் நீரிணையில், இரு நாட்டு மீனவா்களும் மற்றவரின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, மீன் பிடிப்பதால் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனா். கடந்த மாதம் இலங்கை கடற்படை வெளியிட்ட அறிக்கையில், நிகழாண்டு மட்டும் இலங்கை கடற்பரப்பில் மொத்தம் 28 இந்திய படகுகளை கைப்பற்றியதாகவும் 214 இந்திய மீனவா்களை கைது செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...